கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை; களத்தில் ரஸ்ஸல்: 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஸ்டார்க் அசத்தல்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் அசத்தலான கடைசி ஓவரால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை; களத்தில் ரஸ்ஸல்: 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஸ்டார்க் அசத்தல்


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் அசத்தலான கடைசி ஓவரால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4-வது டி20 ஆட்டம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஒஷேன் தாமஸ் வீசிய 2-வது ஓவரிலேயே மேத்யூ வேட் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், அதே தாமஸ் வீசிய 4-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் தலா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாச அந்த ஓவரில் 25 ரன்கள் கிடைத்தன. அதிரடி ஆட்டத்தை மார்ஷ் கையிலெடுக்க கேப்டன் பின்ச் பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தந்தார். இதனால், பவர் பிளே முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

பிறகு பின்ச்சும் அதிரடி காட்ட 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் விளாசி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.

அரைசதம் அடித்த பின்ச் 53 ரன்களுக்கு ஹேடன் வால்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மொய்சஸ் ஹென்ரிகஸ் மற்றும் ஆஷ்டன் டர்னர் தலா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் மார்ஷும் 44 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் டேன் கிறிஸ்டியன் மட்டும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி நம்பிக்கையளித்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிறிஸ்டியன் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

190 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்டில் சிம்மன்ஸ் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் சிம்மன்ஸ் மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் லீவிஸ் அதிரடி காட்ட முதல் 4 ஓவர்களிலேயே மேற்கிந்தியத் தீவுகள் 56 ரன்களை எட்டியது.

இதனால், 5-வது ஓவரிலேயே ஆடம் ஸாம்பாவை அறிமுகப்படுத்தினார் பின்ச். இதற்குப் பலனாக லீவிஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சிம்மன்ஸ் 28-வது பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால், கடந்த ஆட்டத்தில் மிரட்டிய கெயில் இம்முறை 1 ரன் மட்டும் எடுத்து சோபிக்கத் தவறினார். இதனால், ரன் வேகம் குறைந்தது. பிளெட்சரும் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

கடைசி 7 ஓவர்களில் 83 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. கேப்டன் நிகோலஸ் பூரனும், சிம்மன்ஸும் சற்று அதிரடி காட்ட கடைசி 5 ஓவர்களில் 58 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

ஆனால், மிட்செல் மார்ஷ் வீசிய 16-வது ஓவரில் பூரன் 16 ரன்களுக்கும், சிம்மன்ஸ் 72 ரன்களுக்கும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்த இரண்டு ஓவர்கள் பெரிய ஓவர்களாக மாறாததால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டன.

ரைலே மெரெடித் வீசிய 19 ஓவரை சிக்ஸர் அடித்து தொடக்கினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். அதே ஓவரின் 3,4,5-வது பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் ஃபேபியன் ஆலென். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆலென் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், கடைசி ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. களத்தில் ரஸ்ஸல் இருந்தார். ஸ்டார்க் ஓவரை வீசினார். 

அவர் சிறப்பாக பந்துவீசியதால் ரஸ்ஸலால் பவுண்டரி விளாச முடியவில்லை, ரன் எடுக்கவும் மறுத்துவிட்டார். முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

5-வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி வாய்ப்பு பறிபோனது. கடைசி பந்தில் ரஸ்ஸல் பவுண்டரி அடித்தும் பலனளிக்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் அரைசதம் அடித்தும், பந்துவீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்திய மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com