லிவிங்ஸ்டனின் அதிவேக சதம் வீண்: முதல் டி20யில் பாகிஸ்தான் வெற்றி

லிவிங்ஸ்டனின் அதிவேக சதம் வீண்: முதல் டி20யில் பாகிஸ்தான் வெற்றி

​பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் லியாம் லிவிங்ஸ்டன் அதிவேகமாக சதமடித்தும் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் லியாம் லிவிங்ஸ்டன் அதிவேகமாக சதமடித்தும் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பந்துவீச்சைத் தேர்வு செய்த மார்கன்:

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அசாம் - ரிஸ்வான் அதிரடி தொடக்கம்:

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். அசாம் ரன் குவிப்பில் ஈடுபட ரிஸ்வான் ஒத்துழைப்பு தந்தார். பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

இதே வேகத்தில் ரன் குவிக்க முதல் 10 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, அசாம் 35-வது பந்தில் அரைசதம் எட்டினார். ரிஸ்வானும் அதிரடி காட்டத் தொடங்கி 34-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ரன் வேகமும் 9-ஐத் தாண்டத் தொடங்கியது.

இதன்பிறகு, பவுண்டரி, சிக்ஸர்களிலேயே ரன் குவிக்கத் தொடங்கியது பாகிஸ்தான். முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சிக்ஸர்களாக விளாசிய பாகிஸ்தான் வீரர்கள்: 

விக்கெட்டுகள் விழத் தொடங்கினாலும், புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்களும் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிப்பதையே நோக்கமாகக் கொண்டு களமிறங்கினர். சோஹைப் மக்சூத் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 7 பந்துகளில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் அசாம் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஃபகார் ஸமான் 8 பந்துகளில் 26 ரன்களும், முகமது ஹபீஸ் 10 பந்துகளில் 24 ரன்களும் விளாசி ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது.

மோசமான தொடக்கம்:

233 ரன்கள் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டேவிட் மலான் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இமாத் வாசிம் வீசிய 3-வது ஓவரில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட ஜேசன் ராய் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பத் தொடங்கினார்.

ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் ஜானி பேர்ஸ்டோவ் 11 ரன்னுக்கும், மொயீன் அலி 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். ராய் 13 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கேப்டன் மார்கன் பாட்னர்ஷிப் அமைக்க லிவிங்ஸ்டன் பவுண்டரிகளாக விளாசி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

தனிநபராகப் போராடிய லிவிங்ஸ்டன்:

இதனிடையே மார்கனும் அதிரடிக்கு மாற முயற்சித்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும், லிவிங்ஸ்டன் விடாமுயற்சியோடு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்துக்கு நம்பிக்கையளித்து வந்தார்.

சாதனை சதம்:

கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லிவிங்ஸ்டன் களத்தில் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் ஷதாப் கான் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்த லிவிங்ஸ்டன் 42-வது பந்தில் சதத்தை எட்டினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து வெற்றி வாய்ப்பு பறிபோனது.

19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆட்டநாயகன் அப்ரிடி:

பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஷஹீன் அப்ரிடி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com