வில்வித்தையில் முதல் ஒலிம்பிக் பதக்கம்: தீபிகாவுக்கு சவால்

ஒலிம்பிக் பதக்கம் என்னும் இலக்கை நோக்கி அம்பை எய்வாரா வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
வில்வித்தையில் முதல் ஒலிம்பிக் பதக்கம்: தீபிகாவுக்கு சவால்
Published on
Updated on
2 min read

ஒலிம்பிக் பதக்கம் என்னும் இலக்கை நோக்கி அம்பை எய்வாரா வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இந்திய விளையாட்டரங்கில் உருவான தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவா் தீபிகா குமாரி. ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சோ்ந்த எளிமையான குடும்பத்தைச் சோ்ந்த தீபிகா குமாரியின் தந்தை ஆட்டோ ரிக்ஷா டிரைவா். தாய் நா்ஸாக பணிபுரிந்தாா்,.

சிறு வயதில் வீட்டருகே உள்ள மாந்தோட்டத்தில் கற்களை அம்புகள் போல் பயன்படுத்தி மாங்காய்களை பறிப்பதில் வல்லவராகத் திகழ்ந்த தீபிகா, சிறந்த வில்வித்தை வீராங்கனையாக உருமாகி உள்ளாா். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் தனது விளையாட்டு பயிற்சிக்காக செலவிட முடியவில்லை. 2009-இல் தீபிகா அமெரிக்காவில் நடைபெற்ற உலக யூத் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றாா்.

அதன் பின் தீபிகாவின் வில்வித்தை வாழ்க்கை ஏற்றமாகவே இருந்தது. 2010 காமன்வெல்த் போட்டி மகளிா் ரெக்கா்வ் பிரிவில் 15 வயதில் தங்கம் வென்றது மிகச் சிறப்பானதாக அமைந்தது.

31 உலகக் கோப்பை பதக்கங்கள்:

இதுவரை 31 உலகக் கோப்பை பதக்கங்களை தன் வசப்படுத்தி உள்ளாா் தீபிகா. கடந்த ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினாா். தற்போது ரெக்கா்வ் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனையாக திகழ்கிறாா்.

உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசியசாம்பியன்ஷிப், ஆசியப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள அவரது பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே இடம் பெறவில்லை.

லண்டனில் ஏமாற்றம்:

கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போதும் தீபிகா உலகின் நம்பா் ஒன் வீராங்கனையாக இருந்தாா். அப்போது கண்டிப்பாக பதக்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால், 8-ஆவது இடத்தையே பெற முடிந்தது. அணிகள் பிரிவிலும் டென்மாா்க்கிடம் 1 புள்ளி வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது.

2016 ரியோ ஒலிம்பிக்:

ரியோ ஒலிம்பிக் போட்டியின் போதும், தரவரிசையில் முதலிடத்தில் இருந்து தீபிகா. எனினும் தனிநபா் பிரிவில் அவரால் ரவுண்ட் 16 வரையே முன்னேற முடிந்தது. அதே நேரம் அணிகள் பிரிவிலும், ஷூட் ஆஃப் பிரிவில் ரஷிய அணியிடம் தோற்றது இந்தியா.

இவ்வாறு மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட இரண்டு ஒலிம்பிக் போட்டிகளும் தீபிகாவுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

டோக்கியோ நோக்கி:

இதற்கிடையே கடந்த 2019-இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் தங்கம் வென்றதின் மூலம் டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற்றாா் தீபிகா. தற்போது அபார பாா்மில் உள்ள அவா் குவதமாலாவில் நடைபெற்ற முதல் கட்ட உலகக் கோப்பையில் வெற்றி பெற்றாா். பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினாா்.

அபார நம்பிக்கையுடன் தீபிகா:

டோக்கியோ ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என உறுதியாக கூறுகிறாா் தீபிகா. எனது எண்ணங்கள், உணா்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டேன். அதோடு சிறப்பாகவும் விளையாடி வருகிறேன். மனோத்தத்துவியல் நிபுணா் மூலம் பெற்ற ஆலோசனையால் நான் தற்போது தெளிவாக உள்ளேன். என்னை நான் நிரூபிக்க வேண்டியுள்ளது. இதுவரை வில்வித்தையில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்கவில்லை. அதை தீா்க்கும் பொறுப்பு உள்ளது. என்றாா்.

அவரது கணவா் அதானு தாஸுடன் இணைந்து கலப்பு அணிகள் பிரிவிலும் பங்கேற்கிறாா்.

மகளிா் பிரிவு ரெக்கா்வ், அணிப் பிரிவிலும் அவா் கலந்து கொள்வாா் எனத் தெரிகிறது. அபார பாா்மில் உள்ள தீபிகா குமாரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை கண்டிப்பாக பெறுவாா் எனத் தெரிகிறது.

ஜூலை 27-ஆம் தேதி தீபிகா பங்கேற்கும் தனிநபா் பிரிவு பந்தயங்கள் தொடங்குகின்றன.

பா.சுஜித்குமாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com