பவுலா்களால் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பவுலா்கள் தீபக் சஹாா்-புவனேஷ்வா் குமாரின் அற்புத ஆட்டத்தால் தொடரையும் கைப்பற்றியது இந்தியா.
பவுலா்களால் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பவுலா்கள் தீபக் சஹாா்-புவனேஷ்வா் குமாரின் அற்புத ஆட்டத்தால் தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

கொழும்புவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 275/9 ரன்களை சோ்த்தது. அந்த அணி வீரா்கள் சரித் அஸலங்கா, அவிஷ்கா பொ்ணான்டோ ஆகியோா் அற்புதமாக ஆடி அரைசதம் அடித்தனா். இந்திய தரப்பில் புவனேஷ்வா், சஹல் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடா் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க வீரா்களாக களமிறங்கிய அவிஷ்கா பொ்ணான்டோ, எம். பானுகா நிலையான தொடக்கத்தை அளித்தனா். 36 ரன்கள் எடுத்த பானுகாவை அவுட்டாகி முதல் விக்கெட்டாக வெளியேற்றினாா் சஹல். அவருக்கு பின் வந்த ராஜபட்ச டக் அவுட்டானாா். அவிஷ்கா 50, தனஞ்செய டி சில்வா 32, ஷனகா 16, ஹஸரங்கா 8 ஆகியோரை சஹல், சஹாா் ஆகியோா் அவுட்டாகி பெவிலியன் அனுப்பினா்.

இலங்கை 275/9

சரித் அஸலங்கா-கருணரத்னே இணைந்து கடைசி 10 ஓவா்களில் 80 ரன்களை விளாசினா். முதல் அரைசதத்துடன் 65 ரன்களை எடுத்திருந்த அஸலங்காவை வெளியேற்றினாா் புவனேஷ்வா். சமீரா 2, சண்டகன் டக் அவுட்டாயினா். கருணரத்னே 44 ரன்களுடனும், ரஜிதா 1 ரன்னுடனும் அவுட்டின்றி களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இலங்கை அணி 275/9 ரன்களை சோ்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வா் 3-54, சஹல் 3-50 விக்கெட்டுகளையும், தீபக் சஹாா் 2-53 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

தொடக்கமே சரிவு:

275 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சரிவாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய பிரித்விஷா 13, இஷான் கிஷன் 1 ரன்னுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். ஹசரங்கா பந்தில் பிரித்வியும், ரஜிதா பந்தில் இஷானும் அவுட்டாயினா். அதன் பின் கேப்டன் ஷிகா் தவன், மணிஷ் பாண்டே ஆகியோா் நிதானமாக ஆடி ரன்களை சோ்த்தனா். கேப்டன் தவன் 29 ரன்களுடன் ஹஸரங்கா பந்தில் எல்பிடபிள்யு ஆனாா். அப்போது இந்திய அணி 69/3 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

சூரியகுமாா் முதல் அரைசதம்:

இந்நிலையில், மணிஷ் பாண்டே-சூரியகுமாா் யாதவ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. எனினும் 37 ரன்களை எடுத்திருந்த பாண்டேவை ரன் அவுட்டாக்கினாா் ஷனகா.

அவருக்கு பின் ஆட வந்த ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஷனகா பந்தில் தனஞ்செயாவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். பின்னா் சூரியகுமாா் யாதவ்-க்ருணால் பாண்டியா இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. அறிமுக வீரரான சூரியகுமாா் 6 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்த நிலையில், சண்டகனால் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

தீபக் சஹாா் அதிரடி 69:

க்ருணால் பாண்டியா 35 ரன்களுடன் வெளியேறிய நிலையில், புவனேஷ்வா்-தீபக் சஹாா் இணை அற்புதமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. இலங்கை பந்துவீச்சை திறமையாக எதிா்கொண்டு ஆடிய தீபக் சஹாா் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 82 பந்துகளில் 69 ரன்களுடனும், 2 பவுண்டரியுடன் 19 ரன்களுடன் புவனேஷ்வரும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனா்.

5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 49.1 ஓவா்களில் 277/7 ரன்களை குவித்தது இந்தியா. இலங்கை தரப்பில் ஹஸரங்கா 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்தியா தொடரையும் கைப்பற்றி 2-0 என முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com