ஒருநாள் உலகக் கோப்பையில் 14 அணிகள், டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள்: ஐசிசியின் புதிய முடிவுகள்

2003 உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும்.
ஒருநாள் உலகக் கோப்பையில் 14 அணிகள், டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள்: ஐசிசியின் புதிய முடிவுகள்

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் 14 அணிகளும் டி20 உலகக் கோப்பையில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2023-2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள்:

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்ந்து நடைபெறும். 9 அணிகள் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு இரு வருடங்கள் கழித்தும் இறுதிச்சுற்று நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

* 2027, 2031 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. எனவே 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் கடைசியாக 10 அணிகள் பங்கேற்கும். 2003 உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும். 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸில் மோதும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும். 

^ டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கும். 

* கடைசியாக 2017-ல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.

2024-2031-ல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்

2024 -  ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2025 - ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
2026 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2027 - ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை
2028 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2029 - ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
2030 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
2031 - ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com