மலான் அதிரடி: கடைசி கட்டத்தில் கலக்கிய இலங்கை

மலான் அதிரடி: கடைசி கட்டத்தில் கலக்கிய இலங்கை

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.
Published on


இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு அதிரடி தொடக்கத்தைத் தந்து சிறப்பான அடித்தளத்தை அமைத்தது. முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த தொடக்கத்தால் இங்கிலாந்து 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மலான் மட்டுமே அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டத்தில் தாக்கத்தை உண்டாக்கி இலங்கை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

லியாம் லிவிங்ஸ்டன் 14, சாம் பில்லிங்ஸ் 2, கேப்டன் இயான் மார்கன் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி வந்த மலான் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மொயீன் அலியும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாம் கரன் மற்றும் கிறிஸ் ஜோர்டன் மட்டும் கடைசி ஓவரில் அதிரடி காட்டி 17 ரன்கள் சேர்த்தனர். இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரன் 9 ரன்களும், ஜோர்டன் 8 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷ்மந்தா சமீரா 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை பந்துவீச்சாளர் சமீரா
இலங்கை பந்துவீச்சாளர் சமீரா

பினுரா பெர்னான்டோ மற்றும் இசுரு உடானா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com