லீவிஸ் சிக்ஸர் மழை: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது மே.இ. தீவுகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லீவிஸ் சிக்ஸர் மழை: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது மே.இ. தீவுகள்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் பொல்லார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் அதிரடி தொடக்கத்தையே தந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் லேசான அதிரடி காட்டி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி காக் (37 ரன்கள்) விக்கெட்டை ரஸ்ஸல் வீழ்த்தினார்.

இதன்பிறகு, கேப்டன் தெம்பா பவுமா நிதானம் காட்டி விளையாடி வாண்டெர் டசனுடன் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தார். பவுமா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பவுமாவைத் தொடர்ந்து, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், தென் ஆப்பிரிக்காவால் பெரிய ஸ்கோரை அடைய முடியவில்லை. வாண்டெர் டசன் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஃபேபியன் ஆலென் மற்றும் டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

161 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆண்ட்ரே பிளெட்சர் மற்றும் எவின் லீவிஸ் மிரட்டலான தொடக்கத்தைத் தந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்த நிலையில், பிளெட்சர் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயிலும் அதிரடி காட்ட மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு எளிதானது.

சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு அரைசதம் அடித்த லீவிஸ் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக்கு 37 ரன்களே தேவைப்பட்டதால் ரஸ்ஸலும், கெயிலும் அதிரடி காட்டி விரைவில் வெற்றி இலக்கை எட்டினர்.

15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிறிஸ் கெயில் 24 பந்துகளில் 32 ரன்களும், ரஸ்ஸல் 12 பந்துகளில் 23 ரன்களும் விளாசினர்.

இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com