மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்த இலங்கை வீரர் (விடியோ)

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை தொடக்க வீரர் குணதிலகா சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். 
மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்த இலங்கை வீரர் (விடியோ)

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை தொடக்க வீரர் குணதிலகா சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். 

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நார்த் சவுண்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 49 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்தது. குணதிலகா 52 ரன்களும் கேப்டன் கருணாரத்னே 52 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தார்கள். நடுவரிசை வீரர்கள் சொதப்பியபோதும் ஆஷென் பண்டாரா 50 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார். ஹோல்டரும் ஜேசன் முகமதும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். 

எளிதான இலக்கை 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 110 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்கே கிடைத்தது.   

இந்த ஆட்டத்தில் இலங்கை தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகா சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். 55 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது பொலார்ட் வீசிய பந்தை தட்டிவிட்டார் குணதிலகா. அப்போது மறுமுனையில் இருந்த நிசன்கா ஓட முயன்றார். இதனால் குணதிலகாவும் தன் முன்னே இருந்த பந்தைத் தாண்டி ஓடப் பார்த்தார். ஆனால் ரன் எடுக்க முடியாது என்பதால் மீண்டும் கிரீஸுக்குத் திரும்ப முயன்றபோது அவரது காலில் பந்து பட்டது. இதனால் ரன் அவுட் செய்ய ஓடி வந்த பொலார்டால் பந்தை உடனடியாக எடுக்க முடியாமல் போனது. உடனே அவர் நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து இடையூறு செய்ததாக 3-வது நடுவர் தீர்ப்பளித்தார். இதனால் இடையூறு செய்த காரணத்துக்காக ஆட்டமிழந்தார் குணதிலகா. 

பந்து எங்கே உள்ளது எனத் தெரியாத நிலையில் தான் குணதிலகாவின் காலில் பந்து பட்டது, இதனால் அவர் இடையூறு செய்யவில்லை என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள். மேலும் அவர் நன்றாக விளையாடி வந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி பெரிய சரிவைச் சந்தித்து குறைவான ஸ்கோரையே எடுத்தது. 

இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநரும் முன்னாள் வீரருமான டாம் மூடி, நடுவரின் முடிவுக்குச் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தார். வேண்டுமென்றே இடையூறு செய்யவில்லை எனக் கூறினார். ஆட்டம் முடிந்த பிறகு குணதிலகாவை பொலார்ட் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து உரையாடினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்ததாக அறியப்படுகிறது. 

(3.43 முதல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com