அடுத்தடுத்த பந்தில் ஸ்டோக்ஸ், மார்கன் அவுட்: 8 ரன்களில் வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்தடுத்த பந்தில் ஸ்டோக்ஸ், மார்கன் அவுட்: 8 ரன்களில் வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டி20 ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து இந்த முறையும் பந்துவீச்சையே தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

186 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் மெய்டன் ஓவராக வீசி இங்கிலாந்துக்கு அழுத்தம் தந்தார்.

புவனேஷ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து ரன் குவிப்பைத் தொடங்கினர். ஆனால், அந்த ஓவரிலேயே 9 ரன்களுக்கு பட்லர் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ராய் அதிரடி காட்ட பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

பவர் பிளே முடிந்தவுடன் 8-வது ஓவரை வீச ராகுல் சஹார் அழைக்கப்பட்டார். இதற்குப் பலனளிக்கும் வகையில் டேவிட் மலான் 14 ரன்களுக்கு போல்டானார்.

அடுத்த ஓவரிலேயே ஹார்திக் பாண்டியா பந்தில் ராய் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் முதல் 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் முதலிரண்டு ஓவர்கள் அடக்கி வாசித்து அதன்பிறகு அதிரடி காட்டத் தொடங்கினர்.

குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சஹார் என சுழற்பந்துவீச்சாளர்களைக் குறிவைத்து ரன் ரேட்டை உயர்த்தினர். வாஷிங்டன் வீசிய 14-வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என இங்கிலாந்துக்கு மொத்தம் 18 ரன்கள் கிடைத்தன.

சஹார் வீசிய அடுத்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ஸ்டோக்ஸ் சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் விளாச ஆட்டம் முற்றிலும் இங்கிலாந்து பக்கம் திரும்பியது.

ஆனால், 4-வது பந்தில் பேர்ஸ்டோவ் (19 பந்துகள் 25 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கையளித்தார் சஹார். அடுத்த ஓவரில் புவனேஷ்வர் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். இதனால், கடைசி 4 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டன.

17-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். முதல் பந்தில் ஸ்டோக்ஸ் (23 பந்துகள் 46 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கேப்டன் இயான் மார்கனும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகள் விழுந்ததால், ஆட்டம் மீண்டும் இந்தியா பக்கம் திரும்பியது.

18-வது ஓவரை சிறப்பாக வீசிய பாண்டியா 6 ரன்களை மட்டுமே கொடுத்து சாம் கரன் விக்கெட்டை வீழ்த்தினார்.

19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அவர் கடைசி பந்தில் பவுண்டரி உள்பட 10 ரன்களைக் கொடுத்தார்.

இதனால், இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை தாக்குர் வீசினார். முதல் பந்திலேயே ஜோர்டன் 1 ரன் எடுத்தார். அடுத்த 2 பந்துகளில் ஆர்ச்சர் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. இந்த நெருக்கடியில் அடுத்த 2 பந்துகளை வைட் பந்தாக வீசினார் ஷர்துல். இதனால், கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

4-வது பந்தில் ஆர்ச்சர் 1 ரன் எடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் ஆட்டமிழந்தார். 6-வது பந்தில் ஆர்ச்சர் ரன் எடுக்கவில்லை.

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தற்போது 2-2 என்ற நிலையில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com