பட்லரை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய புவனேஷ்வர்: தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-2 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
பட்லரை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய புவனேஷ்வர்: தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-2 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.

225 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முதல் ஓவரை அற்புதமாக வீசிய புவனேஷ்வர் குமார் 2-வது பந்திலேயே ஜேசன் ராய் (0) விக்கெட்டை வீழ்த்தி அந்த ஓவரில் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார்.

ஆனால், ஹார்திக் பாண்டியா வீசிய 2-வது ஓவரில் டேவிட் மலான் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார். இதையடுத்து, ஜோஸ் பட்லரும் அதிரடியில் இணைய அந்த அணியின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து அதிரடி காட்ட இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டையும் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 

நடராஜன் பந்தில் பவுண்டரி அடித்ததன்மூலம், மலான் முதலில் அரைசதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து பட்லரும் அடுத்த ஓவரிலேயே அரைசதத்தை எட்டினார்.

இந்த இணை அச்சுறுத்தலாக நீடித்து வந்த நிலையில் 13-வது ஓவரை வீச புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டார். விளைவு மிகவும் முக்கியமான பட்லரின் (34 பந்துகள் 52 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி 3 ரன்களை மட்டுமே அந்த ஓவரில் கொடுத்தார். பாண்டியாவும் அடுத்த ஓவரை சிறப்பாக வீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

இதையடுத்து, 15-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் பேர்ஸ்டோவ் (7 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி பந்தில் மலான் (46 பந்துகள் 68 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தி மீண்டும் இரட்டை விக்கெட் ஓவராக மாற்றி அசத்தினார்.

இதனால், இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 83 ரன்கள் தேவைப்பட்டன. 16-வது ஓவரை வீசிய பாண்டியா மார்கன் (1 ரன்) விக்கெட்டை வீழ்த்தி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால், கடைசி ஓவர்களில் 81 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த பென் ஸ்டோக்ஸ் நடராஜனிடம் வீழ்ந்தார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 ரன், கிறிஸ் ஜோர்டன் 11 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சாம் கரன் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தும் பயனளிக்காமல் போனது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com