பிரசித், ஷர்துல் மிரட்டல்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரசித், ஷர்துல் மிரட்டல்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா


இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

318 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இருவரும் முதல் 5 ஓவர்களுக்கு 24 ரன்கள் எடுத்து நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கினர். பிரசித் கிருஷ்ணா வீசிய 6-வது ஓவரில் பேர்ஸ்டோவ் தலா 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாச இருவரும் அதிரடிக்கு கியரை மாற்றினர்.

இதனால், இங்கிலாந்து அணி 12-வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்து ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் என்ற நிலையில் ரன் ரேட்டை நீட்டித்து வந்தது.

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் பேர்ஸ்டோவ்
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் பேர்ஸ்டோவ்

முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில் ராய் 15-வது ஓவரில் 46 ரன்களுக்கு பிரசித் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுக்கு பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட் குறையத் தொடங்கியது.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோவ் 94 ரன்களுக்கு ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.

பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷர்துல் மற்றும் கோலி
பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷர்துல் மற்றும் கோலி

மீண்டும் ஒரு இரட்டை விக்கெட் ஓவர்:

ஷர்துல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4-வது பந்தில் பட்லரும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன்பிறகு சாம் பில்லிங்ஸ் மற்றும் மொயீன் அலி சிறிய பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், பிரசித் கிருஷ்ணா மீண்டும் ஒரு முறை பாட்னர்ஷிப்பை முறியடித்தார். 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பில்லிங்ஸ்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய மொயீன் அலி 30 ரன்களுக்கு புவனேஷ்வர் குமார் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே கிருனாள் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டாக சாம் கரன் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்த ஓவரில் அடில் ரஷித் (0) விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர்.

கடைசி விக்கெட்டாக டாம் கரன் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணாவே வீழ்த்தினார். 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து.

இதன்மூலம், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், கிருனாள் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com