நான்கு மாதங்களில் தொடர்ச்சியாக ஏழு தொடர்களை வென்றுள்ள நியூசிலாந்து அணி

இந்தப் பருவத்தில் தொடர்ச்சியாக 7 தொடர்களை அந்த அணி வென்றுள்ளது.
நியூசிலாந்து அணி (கோப்புப் படம்)
நியூசிலாந்து அணி (கோப்புப் படம்)

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து அணி. இதன்மூலம் இந்தப் பருவத்தில் தொடர்ச்சியாக 7 தொடர்களை அந்த அணி வென்றுள்ளது.

நேபியரில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மழை காரணமாக குறைவான ஓவர்களிலேயே விளையாடியது. அந்த அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 31 பந்துகளில் 58 ரன்களும் டெரில் மிட்செல் 16 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். மழை காரணமாக நியூசி. அணியின் இன்னிங்ஸ் 17.5 ஓவர்களுடன் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து வங்கதேச பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது அவர்கள்  என்ன இலக்கை விரட்ட வேண்டும் என அறிவிக்கப்படாமல் இருந்தது. மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் அதைப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் அறிவிக்காத நிலையில் வங்கதேச வீரர்கள் இலக்கு தெரியாமலேயே இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். 1.3 ஓவர்கள் வரை தொடக்க வீரர்களான லிடன் தாஸும் முகமது நைமும் விளையாடினார்கள். இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து வங்கதேச மேலாளர், போட்டி நடுவர் ஜெஃப் குரோவின் அறைக்குச் சென்று புகார் கூறினார். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு டிஎல்எஸ் முறையில் கணக்கிட்டு வங்கதேச அணி வெற்றி பெற 16 ஓவர்களில் 170 ரன்கள் தேவை என்பதை குரோவ் அறிவித்தார். 

கடைசியில் வங்கதேச அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் டி/எல் முறையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. 3-வது டி20 ஆட்டம் ஏப்ரல் 1 அன்று நடைபெறுகிறது.  

இந்த வெற்றியின் மூலம் இந்தப் பருவத்தில் விளையாடிய 7 தொடர்களையும் வென்றுள்ளது நியூசிலாந்து அணி. நவம்பர் இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்தது. இதன்பிறகு பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்துக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 2-3 என டி20 தொடரில் தோல்வியடைந்தது. இப்போது வங்கதேச அணி ஒருநாள், டி20 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. 

2020-21 பருவத்தில் நியூசிலாந்து அணி விளையாடிய தொடர்கள்

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடர் - 2-0 என நியூசி. வெற்றி
மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் - 2-0 என நியூசி. வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்- 2-1 என நியூசி. வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் - 2-0 என நியூசி. வெற்றி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர்- 3-2 என நியூசி. வெற்றி
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் - 3-0 என நியூசி. வெற்றி
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் - 2-0 என நியூசி. வெற்றி*

(* - இன்னும் ஓர் ஆட்டம் மீதம் உள்ளது)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com