இது சரியாக அமையாவிட்டால் நான் கிரிக்கெட் விளையாட மாட்டேன்: ஜோஃப்ரா ஆர்ச்சர்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவசரப்பட்டு மீண்டும் மைதானத்துக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
இது சரியாக அமையாவிட்டால் நான் கிரிக்கெட் விளையாட மாட்டேன்: ஜோஃப்ரா ஆர்ச்சர்

முழு உடற்தகுதியை அடைந்த பிறகே கிரிக்கெட் விளையாட மீண்டும் வருவேன் என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் ஜூன் 2 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். 

கடந்த வாரம் வெள்ளியன்று, முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து தற்போது ஓய்வில் உள்ளார். நான்கு வாரங்கள் கழித்து பந்துவீசத் தயாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 4 முதல் இந்தியாவுக்கு எதிராக தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் ஆர்ச்சர் விளையாட வாய்ப்புள்ளதா என இனிமேல் தான் தெரியவரும். 

தன்னுடைய நிலை பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆர்ச்சர் கூறியதாவது:

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவசரப்பட்டு மீண்டும் மைதானத்துக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். என்னுடைய குறிக்கோள் - இங்கிலாந்து அணிக்காக டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பதே. இவை தான் என்னுடைய இலக்கு. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடிந்தால் நிச்சயம் விளையாடுவேன். இல்லாவிட்டால் அந்தச் சூழலை எதிர்கொள்ளவும் தயாராகவும் உள்ளேன். ஒரு வருடத்தின் சில வாரங்களில் விளையாடாமல் இருந்தால் என்னால் பல வருடங்கள் விளையாட முடியும். 

இந்தக் காயத்திலிருந்து மீண்டு வர எண்ணுகிறேன். அதனால்தான் எப்போது மீண்டும் விளையாடுவேன் என தேதி குறிப்பிடாமல் உள்ளேன். இது சரியாக அமையாவிட்டால் என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது. முழு உடற்தகுதியை அடையாமல் மீண்டும் விளையாட வந்தால் அது எனக்குப் பின்னடைவாகவே அமையும். எனவே எனக்கும் என் வாழ்க்கைக்கும் எது நல்லதாக அமைகிறதோ அதையே நான் செய்யப் போகிறேன். இங்கிலாந்து அணிக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com