ஒத்திவைக்கப்பட்ட போட்டி: தகர்ந்து போன சாய்னா நெவாலின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு

கூடுதல் புள்ளிகளை வீரர்கள் பெற இனி எந்தப் போட்டியும் நடைபெறாது...
ஒத்திவைக்கப்பட்ட போட்டி: தகர்ந்து போன சாய்னா நெவாலின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று பாட்மிண்டன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தேர்வாக முடியாத நிலை சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் போன்ற பிரபல இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரபல வீராங்கனையான 30 வயது சாய்னா நெவால் 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 11 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 

தில்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. கோலா லம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டியும் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, ஜூன் 1 முதல் 6 வரை நடைபெறவிருந்த சிங்கப்பூர் ஓபன் போட்டியும் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று போட்டிகளையும் வைத்து ஒலிம்பிக் கனவு கொண்டிருந்த வீரர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

பி.வி. சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். மூன்று போட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற இருந்தார்கள் இந்திய வீரர்களான சாய்னா நெவாலும் ஸ்ரீகாந்தும். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்காக எஞ்சியிருந்த மூன்று போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மூன்று போட்டிகளையும் நடத்திக்கொள்ள ஜூன் 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டதால் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோரின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு தகர்ந்துள்ளது.

உலக பாட்மிண்டன் சம்மேளனம், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிந்துவிட்டன. இனிமேல் கூடுதலாக போட்டிகள் எதுவும் நடைபெறாது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தரவரிசையில் இனி எந்த மாற்றமும் இருக்காது. கூடுதல் புள்ளிகளை வீரர்கள் பெற இனி எந்தப் போட்டியும் நடைபெறாது. எனினும் நேஷனல் ஒலிம்பிக் குழுக்கள், உறுப்பினர் சங்கங்களிடமிருந்து அனுமதி பெறவேண்டும். இறுதிக்கட்டமாக வீரர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com