இந்திய ஏ அணியில் விஹாரி: பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் விஹாரி சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 
இந்திய ஏ அணியில் விஹாரி: பிசிசிஐ அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹனுமா விஹாரி, இந்திய ஏ அணிக்குத் தேர்வாகியுள்ளார். இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன. 

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். விஹாரி, ஷர்துல் தாக்குருக்கு இந்திய அணியில் இடமில்லை. 

ரோஹித் சர்மாவும் முதல் டெஸ்டில் விராட் கோலியும் இல்லாத நிலையில் இந்திய அணியில் விஹாரி நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு காரணமும் இன்றி விஹாரி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2021 ஜனவரி சிட்னி டெஸ்டில் காலில் காயம் ஏற்பட்டபோதும் பவுன்சர் பந்துகளை உடம்பில் தாங்கிக்கொண்டு அஸ்வினுடன் இணைந்து கடுமையாகப் போராடி டெஸ்டை டிரா செய்து கொடுத்தார் விஹாரி. 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்தார். காயத்துடன் 40 ஓவர்கள் வரை விளையாடி அணியைக் காப்பாற்றினார். எனினும் அந்த டெஸ்டுக்குப் பிறகு விஹாரி வேறெந்த டெஸ்டுக்கும் தேர்வாகவில்லை. இப்போது கோலி, ரோஹித் அணியில் இல்லாதபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சிட்னி போராட்டத்தை இந்திய அணி நிர்வாகம் மறந்துவிட்டதா எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் விஹாரி சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. நவம்பர் 23-ல் தொடர் தொடங்குகிறது.

28 வயது விஹாரி, இந்திய அணிக்காக 12 டெஸ்டுகளில் விளையாடி 1 சதம், 4 அரை சதத்துடன் 624 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 32.84.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com