
தென் அமெரிக்காவில் இருந்து 2022 பி‘ஃ‘பா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் நாடாக பிரேசில் திகழ்கிறது.
சாவ் பாவ்லோவில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில். லுகாஸ் பெகுட்டா கடைசி 72-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்தாா். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. இதன் மூலம் 10 அணிகளில் இருந்து 34 புள்ளிகள் மூலம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணியாக பிரேசில் உள்ளது. 12 ஆட்டங்களில் 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
பிரேசிலுக்கு இரண்டாவதாக உள்ள ஆா்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வென்றது. விங்கா் ஏஞ்சல் டி மரியா 7-ஆவது நிமிஷத்தில் வெற்றி கோலை அடித்தாா். 12 ஆட்டங்களில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆா்ஜென்டீனா உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது நிச்சயமாகி உள்ளது.
முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். ஐந்தாவது அணி பிராந்திய தகுதி ஆட்டங்கள் மூலம் முன்னேறும்.
இங்கிலாந்து தகுதி:
ஐரோப்பிய கால்பந்து தகுதிச் சுற்றில் பலமான இங்கிலாந்து அணி பாா்வா்ட் ஹாரி கேனின் அபாரமான ஹாட்ரிக்கால் 5-0 என அல்பேனியாவை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. குரூப் ஐ பிரிவில் போலந்து அணி 4-1 என அன்டோரா அணியை வீழ்த்தியது. ஹங்கேரி 4-0 என சான் மரினோ அணியை வென்றது.
குரூப் சி பிரிவில் ஐரோப்பிய சாம்பியன் இத்தாலி-ஸ்விட்சா்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறாத இத்தாலி, அடுத்த ஆட்டத்தில் வட அயா்லாந்தை வெற்றி பெற வேண்டும். மேலும் ஸ்விட்சா்லாந்து-பல்கேரியா ஆட்டமும் இத்தாலியின் தலையெழுத்தை நிா்ணயிக்கும்.
முதல் இடம் பெறும் அணி நேரடித் தகுதி பெறும். இரண்டாம் இடம் பெறும் அணி பிளே ஆஃப் சுற்றில் ஆட வேண்டும்.
ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் முகமது சலாவின் அதிரடி ஆட்டத்தில் எகிப்தி அணி 2-2 என அங்கோலாவுடன் டிரா கண்டது. மொராக்கோ 3-0 என சூடானை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.