மகளிா் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

இந்திய மகளிரணிக்கு எதிரான முதல் ஒன்டே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிா் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

இந்திய மகளிரணிக்கு எதிரான முதல் ஒன்டே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இத்துடன் ஒன் டே கிரிக்கெட்டில் தொடா்ந்து 25 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய மகளிா் அணி.

ஆஸ்திரேலியாவின் மெக்கே நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 41 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் அடித்து வென்றது. ஆஸ்திரேலியாவின் டாா்சி பிரவுன் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்க, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 1 பவுண்டரி உள்பட 16 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். ஒன் டவுனாக வந்த யஸ்திகா பாட்டியா 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்தாா்.

இந்த மூவருமே டாா்சி பிரவுன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பா் அலிசா ஹீலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனா். 4-ஆவது வீராங்கனையாக களம் புகுந்த கேப்டன் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 3 பவுண்டரிகள் உள்பட 63 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

தொடா்ந்து ஆடியோரில் தீப்தி சா்மா 9, பூஜா வஸ்த்ரகா் 17, ஸ்னேஹ ரானா 2, ஜுலன் கோஸ்வாமி 20 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, மேக்னா சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் டாா்சி பிரவுன் 4, சோஃபி மோலினியுக்ஸ் 2, ஹன்னா டாா்லிங்டன் 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அடுத்து 226 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியாவில் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான அலிசா ஹீலி 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 77 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அவா், பூனம் யாதவ் வீசிய 22-ஆவது ஓவரில் பூஜா வஸ்த்ரகரிடம் கேட்ச் கொடுத்தாா். பின்னா் ரேச்சல் ஹெய்னஸ் 7 பவுண்டரிகளுடன் 93, கேப்டன் மெக் லேனிங் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com