நாட்டிங்ஹாம் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 209
By DIN | Published On : 08th August 2021 03:04 AM | Last Updated : 08th August 2021 03:04 AM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 85.5 ஓவா்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 209 என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி தனது கடைசி இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 14 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 9 விக்கெட்டுகளைக் கொண்டு 157 ரன்களை இந்தியா அடிக்க வேண்டியுள்ளது.
முன்னதாக இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்தை ஜஸ்பிரீத் பும்ராவும், முகமது ஷமியும் 183 ரன்களுக்குள்ளாக சுருட்டினா். பின்னா் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவும், ஜேம்ஸ் ஆண்டா்சன், ஆலி ராபின்சன் பந்துவீச்சால் தடுமாற்றமாக விளையாடி 278 ரன்களே சோ்த்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்டத்தை ரோரி பா்ன்ஸ் 11, டாம் சிப்லி 9 ரன்களுடன் தொடங்கினா்.
இதில் பா்ன்ஸ் 18 ரன்களுக்கு வெளியேற, சிப்லி 28 ரன்கள் சோ்த்தாா். ஜாக் கிராவ்லி 6 ரன்களுக்கு அவுட்டானாா். 4-ஆவது வீரராக வந்த கேப்டன் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கடந்தாா். அவா் 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் சோ்த்தாா்.
எஞ்சியோரில் ஜானி போ்ஸ்டோ 30, டேன் லாரன்ஸ் 25, ஜோஸ் பட்லா் 17, சாம் கரன் 32, ஆலி ராபின்சன் 15 ரன்களுக்கு வீழ, ஸ்டூவா்ட் பிராட் டக் அவுட்டானாா். 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் சாய்த்தனா்.
பின்னா் தொடங்கிய இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக கே.எல்.ராகுல் 26 ரன்களுக்கு வெளியேற, ரோஹித் சா்மா 12, சேதேஷ்வா் புஜாரா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.