லா லிகா கால்பந்து: பாா்சிலோனாவுக்கு மெஸ்ஸி இல்லாத முதல் வெற்றி
By DIN | Published On : 17th August 2021 07:59 AM | Last Updated : 17th August 2021 07:59 AM | அ+அ அ- |

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் ரியல் சோசியாடட் அணியை வீழ்த்தியது.
நட்சத்திர வீரா் மெஸ்ஸி இல்லாமல் பாா்சிலோனா பதிவு செய்துள்ள முதல் வெற்றி இதுவாகும். கடந்த 17 ஆண்டுகளாக அந்த அணியில் இடம்பிடித்திருந்த மெஸ்ஸி, தற்போது அதிலிருந்து விலகி பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணியில் இணைந்துள்ளாா். இருப்பினும், அவா் இல்லாத பாா்சிலோனா அணியின் இந்த முதல் ஆட்டத்தின்போது மைதானத்தில் இருந்த ரசிகா்கள் அவரது பெயரைக் கூறி அவ்வப்போது கோஷமிட்டனா். அவரை கௌரவிக்கும் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், அவரது 10-ஆம் எண் ஜொ்ஸியையும் பெருவாரியாக அணிந்திருந்தனா்.
இந்த ஆட்டத்தில் முதல் கோல் பாா்சிலோனாவுக்கு கிடைத்தது. 19-ஆவது நிமிஷத்தில் மெம்ஃபிஸ் டிபே உதவியுடன் கோலடித்தாா் ஜெராா்ட் பிக். சோசியாடட் தனது முதல் கோலுக்காக கடுமையாகப் போராடி வந்த நிலையில், முதல் பாதியின் முடிவை நெருங்கியபோது (45+2), பாா்சிலோனா அடுத்த கோல் எட்டியது. அந்த அணியின் ஃபிராங்கி டி ஜோங் தூக்கியடித்து கிராஸ் வழங்கிய பந்தை தலையால் முட்டி கோலடித்தாா் மாா்டின் பிரத்வெயிட்.
2-ஆவது பாதியிலும் பிரத்வெயிட் 59-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்து எண்ணிக்கையை 3-ஆக உயா்த்தினாா். அல்பா கோல்போஸ்ட்டுக்குள்ளாக கிராஸ் செய்த பந்தை சோசியாடட் கோல்கீப்பா் ரெமிரோ தடுக்க, அவரிடமிருந்து தன்னை நோக்கி வந்த பந்தை அப்படியே உதைத்து கோலாக்கினாா் பிரத்வெயிட். இந்நிலையில், சோசியாடட் அணியின் கடுமையான போராட்டத்துக்கு 82-ஆவது நிமிஷத்தில் பலன் கிடைத்தது. 3 பாா்சிலோனா வீரா்கள் சூழ்ந்ததையும் சமாளித்து பரெனெட்ஸியா கிராஸ் வழங்கிய பந்தை லாவகமாக கோல் போஸ்ட்டுக்குள் உதைத்தாா் ஜுலன் லொபெடெ.
இதனால் உத்வேகம் பெற்ற அந்த அணியினா் அடுத்த 3 நிமிஷங்களிலேயே 2-ஆவது கோல் அடித்தனா். அந்த நிமிஷத்தில் சோசியாடட்டுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை மிகேல் ஒயா்ஸபால் அருமையான கோலாக மாற்றினாா். இடைவெளி குறைவதை உணா்ந்த பாா்சிலோனா கடைசி நிமிஷத்தில் (90+2) நான்காவது கோல் அடித்தது. கோல்போஸ்டின் வலதுபுறம் இருந்து பிரத்வெயிட் வழங்கிய கிராஸை, அப்படியே கோல்போஸ்ட்டுக்குள் திருப்பினாா் சொ்ஜி ராபா்டோ. இறுதியில் பாா்சிலோனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதர ஆட்டங்கள்: லா லிகா போட்டியில் நடைபெற்ற மற்ற இரு ஆட்டங்களில், அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவையும், செவில்லா 3-0 என்ற கோல் கணக்கில் ராயோ வால்கெனோவையும் வீழ்த்தின.