எனக்கு மட்டும் ஏன் வேகமாகப் பந்துவீசினாய்?: பும்ராவிடம் கேட்ட ஆண்டர்சன்

எல்லோர் மனத்திலும் நெருப்பை மூட்டியது. இதன் தாக்கம் 5-ம் நாள் தான் தெரிந்தது என்றார்.
எனக்கு மட்டும் ஏன் வேகமாகப் பந்துவீசினாய்?: பும்ராவிடம் கேட்ட ஆண்டர்சன்

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 4-ம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.  இந்த டெஸ்டின் கடைசி கட்டத்தில் தடுமாற்றமான நிலையில் இருந்த இந்தியா, 5-ஆம் நாளில் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ராவின் அதிரடியான ‘ஆல்-ரவுண்ட்’ ஆட்டத்தால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெற்றியை எட்டியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷமி 56, பும்ரா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்கள் வீசியதை மனத்தில் வைத்துக்கொண்டு அதேபோல பவுன்சர் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பும்ரா நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வுட் வீசிய பவுன்சர் பந்து பும்ராவின் ஹெல்மெட்டில் பட்டது. இந்தச் சூழலால் பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி முக்கியமான ரன்களைச் சேர்த்தார்கள் பும்ராவும் ஷமியும். விக்கெட்டுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவதை விட பும்ராவை வெறுப்பேற்றுவதில் இங்கிலாந்து வீரர்கள் ஆர்வம் செலுத்தியதால் அதற்கான விளைவுகளைச் சந்தித்தார்கள்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி நாளன்று என்ன நடந்தது, ஷமியும் பும்ராவும் பேட்டிங்கில் திடீரென சாதித்ததற்குக் காரணம் என்பதை அஸ்வினின் யூடியூப் சானலில் தெரிவித்துள்ளார் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர். இருவரும் இதுபற்றி உரையாடியது:

ஸ்ரீதர்: இதற்கு முன்பு வேகப்பந்து வீச்சாளர்களிடம் எழுதப்படாத ஓர் ஒப்பந்தம் இருந்தது. நீ எனக்கு பவுன்சர் போடாதே, நான் உனக்கு பவுன்சர் வீசமாட்டேன். அதெல்லாம் இப்போது இல்லை. நான் உனக்கு பவுன்சர் வீசுகிறேன், முடிந்தால் நீ எனக்கு பவுன்சர் வீசிக்கொள் என மாறிவிட்டது.

அஸ்வின்: இவ்வளவு நேரம் நீ 80 மைல் வேகத்தில் தானே பந்துவீசி வந்தாய், எனக்கு மட்டும் ஏன் 90 மைல் வேகத்தில் போடுகிறாய் என பும்ராவிடம் ஆண்டர்சன் கேட்டுள்ளார். 

ஸ்ரீதர்: ஆமாம். 3-ம் நாள் ஆட்டம் முடிந்தவுடன் எல்லோரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஆண்டர்சன் பும்ராவின் அருகில் சென்று மன்னிப்பு ஏதோ கேட்கப் போயிருக்கிறார் போல. ஆனால் பும்ராவின் கையை ஆண்டர்சன் உதறியிருக்கிறார்.

அஸ்வின்: இதே போலத்தான் ஜடேஜாவின் கையை இதற்கு முன்பு உதறினார்.

ஸ்ரீதர்: அவங்களுக்கு எல்லாம் 85 மைல் வேகத்தில் தான் பந்துவீசினாய். எனக்கு மட்டும் ஏன் 90 மைல் வேகத்தில் பந்துவீசினாய், இது ஏமாற்றுவேலை. இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பும்ராவிடம் ஆண்டர்சன் கூறியிருக்கிறார். 

அஸ்வின்: பந்து ஹெல்மெட்டில் பட்டதால் அதிர்ந்து போயிருக்கலாம். ஆண்டர்சன் அப்படிப் பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் என்ன ஆனது?

ஸ்ரீதர்: அணி வீரர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தியது. அதற்காக முன்பு அவர்கள் ஒன்றாக இல்லை என அர்த்தமில்லை. எல்லோர் மனத்திலும் நெருப்பை மூட்டியது. இதன் தாக்கம் 5-ம் நாள் தான் தெரிந்தது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com