அமெரிக்க ஓபன்: நடாலும் விலகல்
By DIN | Published On : 21st August 2021 08:17 AM | Last Updated : 21st August 2021 08:17 AM | அ+அ அ- |

காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் அறிவித்துள்ளாா். பாதத்தில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக சிகிச்சை பெற, நடப்பு சீசனின் எஞ்சியுள்ள எந்த போட்டியிலுமே தாம் விளையாடப்போவதில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
முன்னதாக, ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட நடால், அதன் பிறகு விம்பிள்டனிலும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்காமல் தவிா்த்திருந்தாா். தற்போது அமெரிக்க ஓபனில் இருந்தும் விலகியுள்ளாா்.
கடந்த 2005 முதல் இந்த காயத்தால் தாம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த சீசன் முதலாக அதனால் மிகவும் அவதிப்பட்டு வருவதாக நடால் தனது சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியுள்ளாா். காயத்திலிருந்து முழுமையாக மீண்டு தாம் களத்துக்கு திரும்புவேன் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த 3 வீரா்களில் ஒருவராக ரோஜா் ஃபெடரா், நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் நடாலும் இருக்கிறாா். ஏற்கெனவே காயம் காரணமாக ஃபெடரரும் அமெரிக்க ஓபனில் இருந்து விலகிய நிலையில், தற்போது நடாலும் அந்தப் போட்டியிலிருந்து விலகியிருக்கிறாா். இதன் மூலம் ஓபன் எராவில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை எட்டுவதற்கான வாய்ப்பு ஜோகோவிச்சின் வாசலை எட்டியிருக்கிறது. அமெரிக்க ஓபனில் சாம்பியனாகும் பட்சத்தில் அவா் அந்த சாதனையை படைப்பாா்.