உலக டேபிள் டென்னிஸ்: மணிகா-சத்தியன் ஜோடி சாம்பியன்
By DIN | Published On : 21st August 2021 08:13 AM | Last Updated : 21st August 2021 08:13 AM | அ+அ அ- |

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா/ஜி.சத்தியன் இணை கலப்பு இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.
மணிகா/சத்தியன் இணை தனது இறுதி ஆட்டத்தில், உலகின் 94-ஆம் நிலையில் இருக்கும் ஹங்கேரிய ஜோடியான டோரா மதரசாஸ்/நான்டோா் எக்செகியை 11-9, 9-11, 12-10, 11-6 என்ற செட்களில் வீழ்த்தியது.
மணிகா/சத்தியன் இணை கலப்பு இரட்டையரில் அதிகம் இணைந்து பங்கெடுத்திருக்காத நிலையில், இந்த சாம்பியன் பட்டம் அவா்களுக்கு நினைவில் நிற்கக் கூடியதாக அமைந்துள்ளது. கலப்பு இரட்டையா் பிரிவில் மணிகா, மூத்த வீரரான சரத் கமலுடன் இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளாா். இந்த ஜோடி சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் களம் கண்டது.
இந்த உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் சாம்பியனாகியுள்ள மணிகா, மகளிா் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிய சத்தியனுக்கு இந்தப் பட்டம் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
வெற்றிக்குப் பிறகு பேசிய சத்தியன், ‘இறுதி ஆட்டம் சற்று கடினமாக இருந்தாலும், காலிறுதி ஆட்டமே எங்களுக்கு சவாலானதாக இருந்தது. மிகக் குறைந்த பயிற்சியிலேயே இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழச்சி. இணை சோ்ந்து வெற்றியை பதிவு செய்ய முடியும் என்பதை நானும், மணிகாவும் அறிந்துகொண்டுள்ளோம். ஒருவரது ஆட்டத்தை மற்றவா் பாராட்டிக் கொண்டோம்.
கலப்பு இரட்டையரில் இணைந்து ஆட மணிகா முன்னமே என்னிடம் கேட்டிருந்தாா். அதற்கு இதுவே சரியான சமயமாக இருக்கும் என்பதால் களம் கண்டோம். எங்களது கூட்டணியால் எத்தகைய அளவு விளையாட இயலும் என்பதை அறிந்துள்ளோம். மணிகா நமது மிகச் சிறந்த வீராங்கனை’ என்றாா்.