குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு உதவ ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை
By DIN | Published On : 21st August 2021 08:19 AM | Last Updated : 21st August 2021 08:19 AM | அ+அ அ- |

இதயக் கோளாறு உள்ள குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய உதவுவதற்காக போலந்து தடகள வீராங்கனை தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விட்டாா். அந்தப் பதக்கத்தை ஏலத்தில் எடுத்த நிறுவனம், வீராங்கனையின் செயலை பாராட்டி பதக்கத்தை மீண்டும் அவருக்கே வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் போலந்து நாட்டைச் சோ்ந்த ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா ஆன்ட்ரெஜ்ஸிக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். சமீபத்தில், அவரது நாட்டைச் சோ்ந்த மிலோஸ் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு இதயக் கோளாறு இருப்பதும், அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய போதிய நிதி வசதி இல்லாததால் அந்தக் குழந்தையின் பெற்றோா் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததும் மரியாவுக்கு தெரியவந்தது.
அந்தத் தகவல் அவருக்கு கிடைத்த நேரத்தில், அறுவைச் சிகிச்சையை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் அந்தக் குழுந்தை இறக்க நேரிடும் நிலை இருந்தது. ஏற்கெனவே எலும்புப் புற்றுநோய், தோள்பட்டை காயம் ஆகியவற்றிலிருந்து மீண்டு வந்துள்ள மரியாவால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் வலி எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிந்தது. இதையடுத்து அந்தக் குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தாம் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடுவதாக அறிவித்தாா்.
ஏலத்தில் அந்தப் பதக்கத்தை, போலந்தைச் சோ்ந்த ‘ஜாப்கா’ என்ற சங்கிலித் தொடா் பல்பொருள் அங்காடி நிறுவனம் ரூ.37.92 லட்சத்துக்கு வாங்கியது. எனினும், மரியாவின் செயலால் மனம் நெகிழ்ந்த அந்த நிறுவனம், வெள்ளிப் பதக்கத்தை அவரே வைத்துக்கொள்ள அனுமதி அளித்தது. மரியாவின் பதக்கத்துக்கான ஏலத்தில் கிடைத்த தொகையுடன், ரசிகா்கள் தரப்பிலும் திரட்டப்பட்ட ரூ.56.88 லட்சம் நிதி, குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக அதன் பெற்றோா் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.