தங்கம் வெல்வதற்காக நாடே பிரார்த்திக்கிறது: பவினா படேலுக்குப் பிரதமர் வாழ்த்து

அழுத்தம் இல்லாமல் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்.
தங்கம் வெல்வதற்காக நாடே பிரார்த்திக்கிறது: பவினா படேலுக்குப் பிரதமர் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பவினா படேலுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினா படேல். இதன் மூலம் இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் சீனாவின் மியோ ஸாங்கை எதிா்கொண்டார் பவினா படேல். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்கிற கேம் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த பவினா படேல். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் நடைபெற்றது. 

முதல்முறையாக பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள பவினா படேல், தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் தங்கம் வென்றால் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை அவர் படைப்பார். பாராலிம்பிக் போட்டியின் வரலாற்றில் இந்தியா இதுவரை மூன்று தங்கப் பதக்கங்களையே வென்றுள்ளது. இந்திய வீராங்கனைகளில் தீபா மாலிக் மட்டுமே பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் (வெள்ளி) வென்றுள்ளார்.  

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை என்ற சிறப்பை நேற்று பெற்ற பவினா படேல் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. 

பவினா படேலுக்கு வாழ்த்து தெரிவித்துப் பிரதர் மோடி ட்வீட் செய்ததாவது:

வாழ்த்துகள் பவினா. அருமையாக விளையாடினீர்கள்.

ஒட்டுமொத்த தேசமும் உங்கள் வெற்றிக்காக நாளை பிரார்த்தனை செய்யும். உங்களுக்கு ஆதரவளிக்கும். அழுத்தம் இல்லாமல் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களுடைய சாதனைகள் ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்கமூட்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com