முகப்பு விளையாட்டு செய்திகள்
ஐபிஎல்: முதல்முறையாகக் குறைந்த மேக்ஸ்வெல் சம்பளம்
By DIN | Published On : 02nd December 2021 02:03 PM | Last Updated : 02nd December 2021 02:03 PM | அ+அ அ- |

கோலி - மேக்ஸ்வெல்
ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பளம் முதல்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2021 ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்கு ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் தேர்வானார். இம்முறை குறைந்த சம்பளத்துடன் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
2012-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகம் ஆனார் மேக்ஸ்வெல். டிராவிஸ் பர்ட்-டுக்குப் பதிலாக தில்லி அணியில் 20,000 அமெரிக்க டாலருக்குத் தேர்வானார்.
2013 ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி ரூ. 5.30 கோடிக்கு மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்தது. 2014 ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்ய ரூ. 6 கோடி வழங்கியது. நான்கு வருடங்கள் அந்த அணியில் விளையாடினார். 2018-ல் தில்லி அணி ரூ. 9 கோடிக்கு அவரைத் தேர்வு செய்தது. இரு ஆண்டுகளில் பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை மீண்டும் தேர்வு செய்தது. ரூ. 10.75 கோடிக்கு. இதன்பிறகு ஆர்சிபி அணிக்கு ஒரு நல்ல நடுவரிசை வீரர் தேவை என்பதால் கோலியின் விருப்பத்தில் இந்த வருட ஏலத்தில் பெரிய தொகைக்கு ஆர்சிபி அணியில் தேர்வானார் மேக்ஸ்வெல். தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கும் விதமாகச் சிறப்பாக விளையாடினார். 15 ஆட்டங்களில் 6 அரை சதங்களுடன் 513 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். எகானமி - ரூ. 144.
இதனால் இந்த வருடம் மேக்ஸ்வெல்லைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆர்சிபி அணி. ஆனால் இதன் காரணமாக மேக்ஸ்வெல்லின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ரூ. 15 கோடி தரவேண்டியிருப்பதால் மேக்ஸ்வெல்லுக்கு ரூ. 11 கோடியும் சிராஜுக்கு ரூ. 7 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு முறையும் அதிகச் சம்பளம் பெற்று வந்தார் மேக்ஸ்வெல். அதிலும் கடந்த ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்குத் தேர்வாகி ஆச்சர்யப்படுத்தினார். இம்முறை ஆர்சிபி அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ. 11 கோடி என குறைந்த சம்பளத்தில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார். அதேசமயம் 9 பருவத்தில் விளையாடிய மேக்ஸ்வெல், முதல்முறையாக ஓர் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.