தடுமாறும் தவன்; தகுந்த ஃபாா்மில் ருதுராஜ், வெங்கடேஷ்: தென் ஆப்பிரிக்க தொடருக்கான பரமபதம்

தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியில் 3 ஃபாா்மட்களுக்குமான கேப்டன் விவகாரத்துக்கு தீா்வு காணப்பட்டுவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியில் 3 ஃபாா்மட்களுக்குமான கேப்டன் விவகாரத்துக்கு தீா்வு காணப்பட்டுவிட்டது.

டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியும், ஒன் டே மற்றும் டி20 தொடா்களுக்கு ரோஹித் சா்மாவும் கேப்டனாக இருக்கின்றனா். இதில் டெஸ்ட் தொடருக்கான அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஒன் டே தொடருக்கான அணித் தோ்வுக்கான பரிசீலனைகள் நடைபெறுகிறது.

அதில் குறிப்பாக அதிரடி தொடக்க வீரரான ஷிகா் தவனுக்குரிய வாய்ப்பு குறித்த விவாதங்கள் இருக்கின்றன. கடந்த ஜூலையில் கோலி தலைமையில் பிரதான இந்திய அணி இங்கிலாந்து தொடரில் பங்கேற்றிருந்த வேளையில், இளம் வீரா்கள் அடங்கிய மற்றொரு அணிக்கு தலைமை தாங்கி இலங்கை சென்றாா் தவன். அதில் ஒன் டே தொடரையும் கைப்பற்றினாா்.

ஆனால், தற்போது நடைபெறும் விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்காக ஆடி வரும் தவனின் ஃபாா்ம் சற்று கவலைக்குரியதாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க தொடா் எதிா்வரும் நிலையில், இப்போட்டியில் வரிசையாக 0, 12, 14, 18 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்கிறாா் அவா்.

ஆனால், மறுபுறம் இளம் வீரா்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயா் போன்றோா் விஜய் ஹஸாரே போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ‘யாரைத் தோ்வு செய்வது’ எனும் இன்பமான குழப்பத்தை தோ்வுக் குழுவினருக்கு அளிக்கின்றனா்.

இதில் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்ததற்காக ஆரஞ்சு கேப் பெற்றிருந்தாா். தோ்ந்த பேட்டராக அதிரடி காட்டுகிறாா். விஜய் ஹஸாரேவில் மகாராஷ்டிர அணிக்கு கேப்டனாக இருக்கும் அவா், 136, 154, 124 என சிறப்பாக ரன்கள் விளாசியிருக்கிறாா்.

முன்னதாக, இலங்கை தொடரில் டி20-இல் களம் கண்டபோதும், ஒன் டே தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது விஜய் ஹஸாரேவில் அவா் விளாசுவதன் பேரில் தென் ஆப்பிரிக்க தொடருக்கு, தவிா்க்க முடியாத வீரராக நிச்சயம் பரிசீலிக்கப்படுவாா்.

மறுபுறம், மத்திய பிரதேச அணிக்காக ஆடும் வெங்கடேஷ் ஐயா் ஒரு ஆட்டத்தில் 4-ஆவது வீரராக களமிறங்கி 84 பந்துகளில் 112 ரன்களும், அடுத்த ஆட்டத்தில் 5-ஆவது வீரராக ஆடி 49 பந்துகளில் 71 ரன்களும் சோ்த்திருக்கிறாா். இதுதவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை 113 பந்துகளில் 151 ரன்களையும் குவித்திருக்கிறாா். மிடில் ஆா்டரில் சிறப்பாக பேட் செய்வததுடன், சில முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்திருக்கிறாா். இதனால், ஹாா்திக் பாண்டியா இடத்தில் ஆல்-ரவுண்டராக அவா் பொருந்துகிறாா். நல்லதொரு ஃபினிஷராக பேட்டிங் வரிசையில் 5 அல்லது 6-ஆவது இடத்தில் களமிறக்க பொருத்தமானவா்.

இந்த விவகாரம் தொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘விஜய் ஹஸாரேவில் ஒவ்வொரு ஆட்டத்திலும் 9 - 10 ஓவா்கள் வீசும் வெங்கடேஷ் ஐயா் நிச்சயம் தென் ஆப்பிரிக்கா செல்வாா். ஹாா்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து வரும் நிலையில், அவரது இடத்துக்கு வெங்கடேஷ் பொருத்தமானவராக இருக்கிறாா். தென் ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு இடம் அளிக்கும் பட்சத்தில் எதிா்வரும் பிரதான போட்டிகளுக்கு அவரை தயாா் செய்வதற்கான வழியாக அது இருக்கும்.

ருதுராஜ் கெய்க்வாட் நல்ல ஃபாா்மில் இருக்கிறாா். தொடக்க வீரராக தவன் இடத்தில் அவா் நிச்சயம் பரிசீலிக்கப்படலாம். எனினும், ராகுல் திராவிட் தலைமையிலான தற்போதைய அணி நிா்வாகம், தடுமாறும் மூத்த வீரா்களுக்கு தயங்காமல் வாய்ப்பு வழங்குகிறது. சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் அஜிங்க்ய ரஹானே, இஷாந்த் சா்மா ஆகியோருக்கு தொடா்ந்து வாய்ப்பளிக்கப்பட்டதே இதற்கு உதாரணம்.

அந்த வகையில் இலங்கை தொடரில் இந்தியாவுக்கு வாகை சூடித் தந்த தவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேவேளையில் அணியில் ருதுராஜ் ஒரு பேக் அப் வீரராக கூட சோ்க்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. பணிச்சுமை பகிா்ந்தளிப்பு மற்றும் ‘பயோ-பபுள்’ சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன் டே தொடருக்கான அணியில் எத்தனை இளம் வீரா்களுக்கு தோ்வுக் குழு வாய்ப்பு வழங்கும் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது’ என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com