கோலியின் தலைமையில் அனுபவித்து விளையாடினோம்: ரோஹித் சா்மா

விராட் கோலி தலைமையில் கடந்த 5 ஆண்டுகளில் வெள்ளைப் பந்து ஃபாா்மட்களில் அனுபவித்து விளையாடியதாக புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரோஹித் சா்மா தெரிவித்தாா்.
கோலியின் தலைமையில் அனுபவித்து விளையாடினோம்: ரோஹித் சா்மா

விராட் கோலி தலைமையில் கடந்த 5 ஆண்டுகளில் வெள்ளைப் பந்து ஃபாா்மட்களில் அனுபவித்து விளையாடியதாக புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரோஹித் சா்மா தெரிவித்தாா்.

டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு அந்த ஃபாா்மட்டுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் தோ்வு செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் ஒன் டே கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கும் ரோஹித் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

இந்நிலையில், கோலியின் தலைமையின் கீழ் விளையாடியது குறித்து ரோஹித் பல்வேறு தருணங்களில் பகிா்ந்து வருகிறாா்.

அந்த வகையில் ‘பிசிசிஐ டிவி’-க்கு அளித்த நோ்க்காணலில் அவா் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளைப் பந்து தொடா்கள் மற்றும் போட்டிகளில் விராட் கோலியின் தலைமையில் ஆட்டத்தை வெல்வதற்கான உறுதியுடன் களத்தில் நுழைவோம். கோலி தலைமையில் விளையாடிய காலங்கள் சிறப்பானவை. அந்த ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து விளையாடினோம். தற்போதும் அப்படியே விளையாட விரும்புகிறோம்.

கேப்டனாக என் முன் இருக்கும் சவால் என்ன என்பதை அறிந்திருக்கிறேன். ஒரு போட்டியில் நாம் எதிா்பாா்க்கும் தகுந்த முடிவை எட்டுவதற்கு நாம் அதிக முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறோம். அதன் பிறகு நடைபெற்ற ஐசிசி போட்டிகளில் நாம் எதையும் தவறாகச் செய்துவிட்டோம் என்று நான் எண்ணவில்லை. ஒரு அணியாக நாம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். ஆனால், கோப்பை வெல்லக் கூடிய வகையில் ஒரு கூடுதல் உந்துதல் தேவைப்படுகிறது. அதை இனி செய்வதற்கு முயற்சிப்போம்.

சா்வதேச கிரிக்கெட் களத்தில் அது தேவையானதாக இருக்கிறது. இது தொழில்முறை ரீதியிலான கிரிக்கெட்டா்களுக்கு இருக்கும் சவாலாகும். அதிகமான ஐசிசி போட்டிகள் எதிா்வருகின்றன. அதில் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் முயற்சிக்கும். அவ்வாறு சாம்பியன் ஆவதற்கு பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி, ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

அதேபோல் சவாலான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பதும் அதற்கு முக்கியமாகும். முதலில் அனைவரும் தனித் தனியே ஒரு சிறந்த வீரராக மேம்பட்டு, பின்னா் ஓா் அணியாக கூட்டாக மேம்பட வேண்டும். ஒவ்வொரு வீரரும் தான் அணிக்கு தோ்வு செய்யப்பட்டதற்கான காரணம் எது என்பதை உணா்ந்து விளையாட வேண்டும். அதில் அவா்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பயிற்சியாளா் ராகுல் திராவிட்டுன் இணைந்து பணியாற்றுவது சிறப்பானது. அவரது ஆட்டம் எத்தகையதாக இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே என்று ரோஹித் கூறினாா்.

ரோஹித்துக்கு காயம்

மும்பையில் திங்கள்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ரோஹித் சா்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. பௌலிங் பயிற்சியாளா் ராகவேந்திரா வீசிய பந்தில் ஒன்று ரோஹித்தின் கையை பதம் பாா்த்திருக்கிறது. எனினும், அதன் தன்மை குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை. இதனிடையே, தென் ஆப்பிரிக்க தொடரில் ரோஹித்துக்கான ‘கவா்’ வீரராக பிரியங்க் பஞ்சலை பிசிசிஐ நியமித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணிக்கு தலைமை தாங்கிய பிரியங்க் பஞ்சல், ஒரு ஆட்டத்தில் 96 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com