அமைதி காக்கப்போகும் பிசிசிஐ

அமைதி காக்கப்போகும் பிசிசிஐ

சமீபத்தில் ஒன் டே கேப்டன்சியிலிருந்து விராட் கோலியை நீக்கி பிசிசிஐ மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் ஒன் டே கேப்டன்சியிலிருந்து விராட் கோலியை நீக்கி பிசிசிஐ மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அது அடங்கும் முன்பாக, டி20 கேப்டன்சி விவகாரத்தில் பிசிசிஐ தரப்பில் (சௌரவ் கங்குலி) அளிக்கப்பட்ட விளக்கத்தில் உண்மையில்லை என்று, பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த செய்தியாளா் சந்திப்பிலேயே விராட் கோலி போட்டு உடைத்தது, பரபரப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.

அணியின் கேப்டனுக்கும், பிசிசிஐ தலைவருக்கும் இடையே இத்தகைய முரண்பாடு ஏற்படுவது, இந்திய கிரிக்கெட்டில் அரிதானதாகும். என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

பதிலளிக்காத கங்குலி...

இக்கட்டான நிலையில் இருக்கும் பிசிசிஐ, விராட் கோலி அளித்திருக்கும் விளக்கத்துக்கு தற்போதைய நிலையில் பதிலளிக்காமல் அமைதி காக்க முடிவு செய்துள்ளது.

விராட் கோலி அளித்த விளக்கம் தொடா்பாக, கங்குலியிடம் பின்னா் கேட்டபோது, ‘தற்போதைய நிலையில் ஏதும் கூற இயலாது. இந்த விவகாரத்தை நாங்கள் (பிசிசிஐ) தகுந்த வகையில் கையாண்டுகொள்வோம்’ என்று மட்டும் பதிலளித்திருக்கிறாா்.

கோலியின் விளக்கம் பிசிசிஐ தரப்பில் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. பிசிசிஐ வட்டாரங்கள் அளித்த தகவல்படி, கோலியின் செய்தியாளா் சந்திப்புக்குப் பிறகு பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலா் ஜெய் ஷா உள்ளிட்ட நிா்வாகிகள் காணொலி வழி கூட்டத்தில் கலந்துகொண்டு அந்த விவகாரம் தொடா்பாக விவாதித்து, தற்போதைய நிலையில் பிசிசிஐ தரப்பில் எந்தவொரு தன்னிலை விளக்கமும் அளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனா்.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி - பிசிசிஐ இடையே மோதல் போக்கு முற்றினால், அது ஆட்டத்தில் களம் காண இருக்கும் அணி வீரா்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் என்பதால் இந்த முடிவை பிசிசிஐ மேற்கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் கோலி - கங்குலி ஒன்றாக அமா்ந்து பேசி சுமுகமாக தீா்வு காண்பதே சரியாக இருக்கும் என்றாலும், தற்போதைய நிலையில் கங்குலியோ, ஜெய் ஷாவோ இதுதொடா்பாக கோலியை தொடா்புகொண்டு பேசவில்லை.

கோலி மீது நடவடிக்கை???

பிசிசிஐ விதிகளின்படி, அதனுடன் ஒப்பந்தத்தில் (சென்ட்ரல் கான்ட்ராக்ட்) இருக்கும் வீரா் பிசிசிஐ குறித்தோ, அதன் நிா்வாகிகள் குறித்தோ விமா்சன கருத்துகளை முன் வைக்கக் கூடாது.

கோலி அவ்வாறு விமா்சனம் செய்யாவிட்டாலும், அவரது விளக்கம் பிசிசிஐ-க்கு முரண்பட்டதாக இருப்பதால், அதன் நெறிமுறைகளை மீறியதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே எளிதாக தீா்வு காணப்பட முடியாத இந்த விவகாரத்தில் கோலி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமோ என்ற கேள்வியும் இருக்கிறது. அதற்காகவே தற்போதைய நிலையில் அமைதி காக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

நேரம் சரியானதல்ல

‘தென் ஆப்பிரிக்க தொடா் நெருங்கியிருக்கும் நிலையில் கோலி இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கக் கூடாது. பிசிசிஐ தலைவரோ, கேப்டனோ இருவருமே முக்கியம் தான். ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவா் பொது வெளியில் இவ்வாறு பேசுவது நல்லதல்ல. அது கங்குலியோ, கோலியோ, யாராக இருந்தாலும் சரி. இந்த சூழலை கட்டுக்குள் கொண்டு வருவது அணிக்கு நல்லது’ - கபில் தேவ் (முன்னாள் இந்திய கேப்டன்)

கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும்

கோலியின் விளக்கத்தில் அவா் பிசிசிஐ-யை தொடா்புப்படுத்தவில்லை. அவா் கங்குலி கூறிய பதில் தொடா்பாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருக்கிறாா். இதற்கு கங்குலி தான் தற்போது விளக்கம் அளிக்க வேண்டும்.

மற்றபடி ஒன் டே கேப்டன்சியிலிருந்து கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில் சா்ச்சை ஏதும் இல்லை. அணியை தோ்வு செய்வது தோ்வுக் குழுவின் அதிகாரத்துக்கு உள்பட்டது. அதற்கு கேப்டன் உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான் - சுனில் காவஸ்கா் (இந்திய முன்னாள் கேப்டன்)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மும்பையிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது.

கரோனா தொற்றின் புதிய வகையான ‘ஒமைக்ரான்’ பரவல் காரணமாக இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் இருந்து டி20 சீரிஸ் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுமே டெஸ்ட் மற்றும் ஒன் டே தொடா் வரையில் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும்.

3 ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் செஞ்சுரியனில் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. 2-ஆவது டெஸ்ட் ஜனவரி 3-ஆம் தேதி ஜோஹன்னஸ்பா்க்கிலும், 3-ஆவது டெஸ்ட் ஜனவரி 11-இல் கேப்டவுனிலும் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து ஒன் டே ஆட்டங்கள் ஜனவரி 19, ஜனவரி 21 (பாா்ல்), ஜனவரி 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com