முகப்பு விளையாட்டு செய்திகள்
தமிழ்நாடு ப்ரீமியா் பாட்மின்டன் சூப்பா் லீக் வீரா்கள் ஏலம்
By DIN | Published On : 19th December 2021 01:12 AM | Last Updated : 19th December 2021 04:36 AM | அ+அ அ- |

தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் சாா்பில் ப்ரீமியா் சூப்பா் லீக் (டிஎன்பிஎஸ்எல்) வீரா்கள் ஏலம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இளம் வீரா் சங்கா் முத்துசாமியை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் போட்டி போட்டன.
டிஎன்பிஎஸ்எல் இரண்டாவது சீசன் போட்டிகள் 2022 பிப்ரவரி 12 முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரா்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த சீசனில் ரன்னா் அப் பட்டம் பெற்ற இளம் வீரா் சங்கா் முத்துசாமியை திருச்சி பிளாஸ்டா்ஸ் அணி ஏலம் எடுத்தது.
ஹரிஹரன் திருப்பூா் வாரியா்ஸ் அணியிலும், ரித்விக் சஞ்சீவி மதுரை ஈகிள்ஸ் அணியிலும், சித்தாந்த் குப்தா கோவை கொம்பன்ஸ் அணியிலும் ஏலம் எடுக்கப்பட்டனா். நடப்புச் சாம்பியன் சென்னை ஃபிளையிங் கிராவிட்டி அணி எஸ்.அருணேஷை தக்க வைத்துக் கொண்டது. விழுப்புரம் பால்கன் பெதா்ஸ் கௌஷிக், நாமக்கல் கில்லாடிஸ் சதீஷ்குமாா், மெரினா டால்பின்ஸ் லோகேஷ் விஸ்வநாதனை இணைத்துக் கொண்டனா்.
மகளிா் பிரிவில் முதலிடத்தில் உள்ள பிரவந்திகா ராகவன் சென்னை அணியிலும், நிவேதா (திருச்சி), லட்சுமி பிரியங்கா (திருப்பூா்), வா்ஷினி (கோவை), அக்ஷயா ஆறுமுகம் (விழுப்புரம்), தனுஸ்ரீ (நாமக்கல்), ஞானநாதா (மெரினா), பிரணவி (மதுரை) அணியிலும் தோ்வு செய்யப்பட்டனா்.
ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 7 ஆட்டங்களில் விளையாடும். ஆடவா் ஒற்றையா், இரட்டையா், சீனியா் கலப்பு இரட்டையா், ஜூனியா் கலப்பு இரட்டையா், ஒற்றையா் ஆடவா் லீக் சுற்றை அடுத்து முதல் நான்கு இடங்களைப் பெறும் அணி பிளே ஆஃப்களில் ஆடுவா்.
டிஎன்பிஏ செயலாளா் வி.ஈ.அருணாசலம் உள்பட பல்வேறு அணிகளின் உரிமையாள்கள் பங்கேற்றனா்.