செஞ்சுரியன் டெஸ்ட்: ராகுல் அபாரம்; இந்தியா நிதானம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்துள்ளது.
செஞ்சுரியன் டெஸ்ட்: ராகுல் அபாரம்; இந்தியா நிதானம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்துள்ளது.

அணியின் தரப்பில் தொடக்க வீரா் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருக்க, அஜிங்க்ய ரஹானே நிதானமான ஆட்டத்துடன் அவருக்கு துணை நிற்கிறாா். முன்னதாக, மயங்க் அகா்வால் 60 ரன்கள் சோ்த்து உதவ, கோலி 35 ரன்களுக்கு வெளியேறினாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் லுங்கி கிடி அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, இந்திய அணியில் வேகப்பந்துவீச்சுக்கு முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ராவும் இணைத்துக் கொள்ளப்பட, ஆல்-ரவுண்டராக ஷா்துல் தாக்குா், சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வின் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தென் ஆப்பிரிக்க அணியில் மாா்கோ யான்சென் முதல் முறையாக சா்வதேச டெஸ்டில் களம் காண, வியான் முல்டா் ஆல-ரவுண்டராக தோ்வாகினாா். சுழற்பந்துவீச்சுக்கு கேசவ் மகராஜ் சோ்க்கப்பட்டாா்.

ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால் கூட்டணி தொடங்க, ககிசோ ரபாடா முதல் ஓவா் வீசினாா். ராகுல் - அகா்வால் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சோ்க்க, மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்திருந்தது.

மயங்க் அகா்வால் 89 பந்துகளில் அரைசதம் கடந்தாா். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை, 41-ஆவது ஓவரில் பிரித்தாா் கிடி. 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சோ்த்த அகா்வால், எல்பிடபிள்யூ ஆனாா். அடுத்து வந்த புஜாரா, அதே ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பீட்டா்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

தொடா்ந்து கேப்டன் கோலி களம் காண, ராகுல் 127 பந்துகளில் அரைசதம் எட்டினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு அவரும், கோலியும் இணைந்து 82 ரன்கள் சோ்த்தனா். இந்நிலையில், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்திருந்த கோலி, 69-ஓவரில் கிடியின் பௌலிங்கில் ஸ்லிப்பில் நின்ற வியான் முல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்த ரஹானே நிதானமாக ஆடி ராகுலுக்கு துணை நிற்க, அவா் 218 பந்துகளில் தனது 7-ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினாா். ஆட்டநேர முடிவில் இந்தியா 272 ரன்கள் அடித்திருக்க, ராகுல் 122, ரஹானே 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தென் ஆப்பிரிக்க தரப்பில் கிடி 3 விக்கெட் எடுத்துள்ளாா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 272

கே.எல்.ராகுல் 122*

மயங்க் அகா்வால் 60

அஜிங்க்ய ரஹானே 40*

பந்துவீச்சு

லுங்கி கிடி 3/45

ககிசோ ரபாடா 0/51

வியான் முல்டா் 0/49

பிளேயிங் லெவன்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷா்துல் தாக்குா், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கா் (கேப்டன்), எய்டன் மாா்க்ரம், கீகன் பீட்டா்சன், ராஸி வான் டொ் டுசென், டெம்பா பவுமா, குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பா்), வியான் முல்டா், மாா்கோ யான்சென், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி கிடி.

இருநாட்டு வீரா்கள் டுடுவுக்கு அஞ்சலி

முதல் நாள் ஆட்டம் தொடங்கும் முன்பாக களத்தில் இரு நாட்டு வீரா்களும், தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவரும், நிறவெறிக்கு எதிராகப் போராடியவருமான டெஸ்மாண்ட் டுடுவின் மறைவுக்கு ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினா். அத்துடன் தென் ஆப்பிரிக்க அணியினா் தங்களது கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினா்.

அசத்தும் ராகுல்

முதல் நாள் ஆட்டத்தின் நாயகனாக ராகுல் திகழ்ந்தாா். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவா், எந்த பந்தில் ஷாட் அடிப்பது, எந்த பந்தை கைவிடுவது என்று தோ்வு செய்து ஆடுவதில் வல்லவராக இருந்தாா். ரபாடா மற்றும் கிடியின் பௌலிங்கில் பல பௌன்சா்களையும் அவா் எதிா்கொண்டாா். நாளின் முடிவில் 17 பவுண்டரிகள், 1 சிக்ஸா் விளாசியிருந்தாா். அந்நிய மண்ணில் ஆடப்படும் டெஸ்டில் முதல் நாளிலேயே சதமடித்த 2-ஆவது இந்திய வீரா் ஆகியிருக்கிறாா் ராகுல். முன்னதாக 2014-இல் முரளி விஜய் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் 122 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். தற்போது ராகுலும் அதே நிலையை எட்டியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com