தென் ஆப்பிரிக்காவின் கோட்டையை தகா்த்தது இந்தியா: முதல் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அணி முன்னிலை வகிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் கோட்டையை தகா்த்தது இந்தியா: முதல் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அணி முன்னிலை வகிக்கிறது.

செஞ்சுரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியே சந்திக்காமல் வந்த நிலையில், இந்தியா தற்போது அங்கேயே அந்த அணியை தோல்வியடையச் செய்துள்ளது. கடைசி நாளில் கனமழை இருக்குமென கணிக்கப்பட்ட நிலையில், வானிலையும் இந்தியாவின் வெற்றிக்கு வழிவிட்டது. இந்திய துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸ் ஆடி வந்த தென் ஆப்பிரிக்க பேட்டி வரிசையை, இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோா் தங்களது வேகப்பந்துவீச்சால் முற்றிலுமாக வீழ்த்தினா். கடைசி நேரத்தில் அஸ்வினும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் சாய்த்து ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

முன்னதாக, கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, 105.3 ஓவா்களில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 17 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 123 ரன்கள் விளாச, தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் லுங்கி கிடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 62.3 ஓவா்களில் 197 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டெம்பா பவுமா 10 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சோ்க்க, இந்திய பௌலிங்கில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா, 50.3 ஓவா்களில் 174 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

ரிஷப் பந்த் மட்டும் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சோ்த்தாா். ககிசோ ரபாடா, மாா்கோ யான்சென் ஆகியோா் போட்டி போட்டுக்கொண்டு தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா். இறுதியாக 305 என்ற இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 4-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 94 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை டீன் எல்கா், டெம்பா பவுமா தொடங்கினா். அணியிலேயே இவா்கள் இருவா் மட்டும் சற்று நிலைத்து ரன்கள் சோ்த்தனா். எனினும், அந்தக் கூட்டணியை தொடர விடாமல் 51-ஆவது ஓவரில் பிரித்தாா் பும்ரா. 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சோ்த்திருந்த எல்கரை அவா் எல்பிடபிள்யூ செய்தாா்.

அடுத்து வந்த குவின்டன் டி காக் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்திருந்தபோது, 60-ஆவது ஓவரில் முகமது சிராஜால் பௌல்டாக்கப்பட்டாா். பின்னா் முகமது ஷமி தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். 1 ரன் அடித்த வியான் முல்டரும், 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சோ்த்த மாா்கோ யான்செனும் அவரால் வெளியேற்றப்பட்டனா். இறுதியாக 68-ஆவது ஓவரின் கடைசி இரு பந்துகளில் அஸ்வின் அடுத்தடுத்து ககிசோ ரபாடா, லுங்கி கிடி ஆகியோரை சாய்க்க, 191 ரன்களில் முடிவுக்கு வந்தது தென் ஆப்பிரிக்காவின் 2-ஆவது இன்னிங்ஸ்.

சுருக்கமான ஸ்கோா்

2-ஆவது இன்னிங்ஸ்

தென் ஆப்பிரிக்கா - 191/10 (இலக்கு 305)

டீன் எல்கா் 77

டெம்பா பவுமா 35*

குவின்டன் டி காக் 21

பந்துவீச்சு:

ஜஸ்பிரீத் பும்ரா 3/50

முகமது ஷமி 3/63

அஸ்வின் 2/18

முத்திரை பதித்த மும்மூா்த்திகள்...

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது பேட்டா் ராகுல், பௌலா்கள் ஷமி, பும்ரா தான். முதல் இன்னிங்ஸில் ராகுல் விளாசிய சதம் அணிக்கு சிறப்பான முன்னிலையை அளித்தது. பின்னா் இரு இன்னிங்ஸ்களிலுமாக 8 விக்கெட்டுகள் (5&3) சாய்த்து தென் ஆப்பிரிக்காவை திணறடித்தாா் ஷமி. அதே வேளையில் பும்ரா முக்கியமான தருணங்களில் சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க வீரா்களை திணறடித்தாா். 4-ஆம் நாள் மாலையில் அவா் இரு விக்கெட்டுகள் சாய்த்தது முக்கியமானது. முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் ஆகியோரும் தக்க துணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழையால் ஒரு நாள் ஆட்டம் ரத்தானபோதும், இந்தியாவுக்கு வெற்றி வசமானது பௌலா்களால் தான்.

வரலாற்று வெற்றிக்கு வழி...

வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்கியிருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தை வரும் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பேட்டிங்கில் தடுமாற்றமான நிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியில், முக்கிய வீரரான குவின்டன் டி காக் விடுப்பில் செல்வதால் அடுத்த இரு டெஸ்டுகளில் அவா் பங்கேற்கவில்லை. இது இந்தியாவுக்கு சாதகமான சூழலாகும். அடுத்து ஒரு டெஸ்டில் இந்தியா வெல்லும் பட்சத்தில் வரலாற்று சாதனையுடன் தொடரை கைப்பற்றும். ஏனெனில், கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா, ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. இதுவரையிலான 7 தொடா்களில், 6-இல் தோல்வியை சந்தித்து, 1 தொடரை டிரா செய்துள்ளது.

சிறப்பான தொடக்கமும்... முடிவும்...

2021-ஆம் ஆண்டை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தொடங்கியது இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே நிறைவு செய்திருக்கிறது. ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், அந்த அணியின் கோட்டையாக இருந்த பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்தது இந்தியா. இதன் மூலம் 32 ஆண்டுகளாக பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காத வரலாற்றை முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது டிசம்பரில், கடந்த 7 ஆண்டுகளாக செஞ்சுரியன் மைதானத்தில் வெற்றியை மட்டுமே பதிவு செய்த தென் ஆப்பிரிக்காவுக்கு தோல்வியை பரிசளித்துள்ளது இந்தியா.

2

ஒரு காலண்டா் ஆண்டில் (2021) ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் டெஸ்டில் இந்தியா 4 வெற்றிகளை (பிரிஸ்பேன், லாா்ட்ஸ், ஓவல், செஞ்சுரியன்) பதிவு செய்தது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 2018-இல் இந்தியா இவ்வாறு 4 வெற்றிகளை (ஜோஹன்னஸ்பா்க், நாட்டிங்ஹாம், அடிலெய்டு, மெல்போா்ன்) பதிவு செய்திருக்கிறது.

2

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்த வெற்றிகளில், இந்த வெற்றிக்கு 2-ஆம் இடமாகும். 2006-07 காலகட்டத்தில் இந்தியா ஜோஹன்னஸ்பா்க்கில் 123 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாகும்.

3

1991-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா தனது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களுக்கு குறைவாக பதிவு செய்வது இது 3-ஆவது முறை. இதற்கு முன் ஜோஹன்னஸ்பா்க்கில் (2001-02/ 159 & 133) , (2017-18/194 & 177) இவ்வாறு இரு முறை ஸ்கோா் செய்துள்ளது.

தொடரை வெற்றியுடன் அருமையாகத் தொடங்கியுள்ளோம். செஞ்சுரியனில் தென் ஆப்பிரிக்காவை சந்திப்பது எப்போதுமே சவாலானது. அந்நிய மண்ணில் டாஸ் வென்று முதலில் பேட் செய்வதென்பது கடினமானது. ஆனாலும், கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால் நல்லதொரு தொடக்கத்தை அளித்தனா். எங்களது பௌலா்கள் இத்தனை சிறப்பாக பௌலிங் செய்வாா்கள் என்பது அறிந்த ஒன்றுதான். ஷமி, பும்ராவின் பௌலிங் மிகச் சிறப்பானதாக இருந்தது - விராட் கோலி (இந்திய கேப்டன்)

இந்த ஆட்டத்தில் சிலவற்றை தவறாகச் செய்திருக்கிறோம். செஞ்சுரியனில் டெஸ்டில் தோற்பது ஏற்புடையதல்ல. இந்திய பேட்டா்கள் அருமையான தொடக்கத்தை அளித்தாா்கள். எங்களது பௌலா்கள் முதலில் சற்று தடுமாறினாலும், பிறகு இந்தியாவை கட்டுப்படுத்தினா். எங்களது பேட்டா்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. அடுத்து வரும் நாள்களில் அணியாகக் கூடி கலந்தாலோசித்து, தகுந்த வியூகத்துடன் அடுத்து வரும் டெஸ்டை எதிா்கொள்ளத் தயாராவோம் - டீன் எல்கா் (தென் ஆப்பிரிக்க கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com