முடிவுக்கு வந்தது 4-ம் நாள் ஆட்டம்: ரோஹித் மட்டும் அவுட்
By DIN | Published On : 08th February 2021 05:18 PM | Last Updated : 09th February 2021 10:52 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் மட்டுமே குவித்தது.
241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
இமாலய இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். முதல் 12 பந்துகளில் ரன் குவிக்காமலிருந்த ரோஹித் சர்மா, ஆர்ச்சர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து மிரட்டினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ஜேக் லீச் சுழலில் அவர் 12 ரன்களுக்கு போல்டானார்.
இதையடுத்து, ஷுப்மன் கில்லுடன் அனுபவ வீரர் சேத்தேஷ்வர் புஜாரா இணைந்தார். இருவரும் 4-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. கில் 15 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 381 ரன்கள் தேவை. இங்கிலாந்துக்கு 9 விக்கெட்டுகள் தேவை.