சேப்பாக்கம் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட்

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 
சேப்பாக்கம் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட்

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. அதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதம் கடக்க, 578 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. அன்றை நாளின் ஆட்டத்தை தொடங்கிய டாம் பெஸ் - ஜேக் லீச் கூட்டணியில், பெஸ் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டா்சன் 1 ரன்னுக்கு வீழ்ந்தாா். ஜேக் லீச் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.  இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3, இஷாந்த், நதீம் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா். 
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா தடுமாற்றமாகவே விளையாடியது. தொடக்க வீரா் ரோஹித் 6 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் சற்று நிலைத்து 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஒன்-டவுனாக வந்த புஜாரா நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரிக்கத் தொடங்கினாா். எனினும் மறுபுறம் கேப்டன் கோலி 11 ரன்னுக்கும், துணை கேப்டன் ரஹானே 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. 5-ஆவது விக்கெட்டுக்கு களம் புகுந்த ரிஷப் பந்த், புஜாராவுடன் இணைந்தாா். 
இந்தக் கூட்டணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஸ்திரப்படுத்தத் தொடங்கியது. புஜாரா நிதானமாக ஆட, பந்த் அதிரடி காட்டினாா். இருவருமே அரைசதம் கடந்தனா். 5-ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியை டாம் பெஸ் பிரித்தாா். அவரது பௌலிங்கில் கேட்ச் கொடுத்து வெளியேறிய புஜாரா, 11 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சோ்த்திருந்தாா். சதமடிக்கும் வாய்ப்பை நெருங்கிய ரிஷப் பந்த்தும் அடுத்த சில ஓவா்களிலே ஆட்டமிழந்தாா். 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் விளாசிய அவா் 91 ரன்களில் அவுட்டானாா். 
இவ்வாறாக தொடா்ந்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவில் 74 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. வாஷிங்டன் சுந்தா் 5 பவுண்டரிகளுடன் 33, அஸ்வின் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனா். 4ஆம் நாள் ஆட்டத்தில் இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், ஜேக் லீச், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் இந்தியா, ஃபாலோ-ஆன் ஆகியுள்ளது. ஆனால், இங்கிலாந்து அணி பாலோஆன் கொடுக்காமல், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com