போட்டி ஊதியத்தை உத்தரகண்ட் மீட்புப் பணிக்கு அளிக்கிறேன்: பந்த்
By DIN | Published On : 08th February 2021 06:50 PM | Last Updated : 08th February 2021 06:50 PM | அ+அ அ- |

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து விழுந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மீட்புப் பணிக்கு போட்டி ஊதியத்தை அளிப்பதாக இந்தியக் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியாகியுள்ளனர், 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 153 பேர் காணவில்லை.
இதனிடையே, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.
இவர் தனது போட்டி ஊதியத்தை உத்தரகண்ட் வெள்ள மீட்புப் பணிக்கு அளிப்பதாக சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மீட்புப் பணிக்கு நிறைய பேர் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.