ஜனவரி மாத சிறந்த வீரர் பந்த்: ஐசிசி அறிவிப்பு
By DIN | Published On : 08th February 2021 04:55 PM | Last Updated : 08th February 2021 04:55 PM | அ+அ அ- |

சென்னை டெஸ்டில் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிடும் பந்த்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற 2 டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாதத்தின் சிறந்த வீரர்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்கள் பரிந்துரையில் இந்திய அணியின் ரிஷப் பந்த், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோரது பெயர்கள் இருந்தன. இந்த நிலையில், ரிஷப் பந்த் இந்த விருதினை வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் 89 ரன்களும் எடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். இந்த ஆட்டங்களின் அடிப்படையில் பந்த் இந்த விருதை வென்றுள்ளார்.
இதுபற்றி பந்த் கூறியது:
"எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பது பெரிய விருது. ஆனால், இதுபோன்ற முன்னெடுப்புகள் என்னைப் போன்ற இளைஞர்களை ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும். இந்த விருதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் சமர்ப்பிக்கிறேன். மேலும் எனக்காக வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றி."
ஐசிசி விருது:
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரர், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகர்கள் இணையம் வழியாக வாக்குகளைச் செலுத்தலாம்.
முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமி ரசிகர்களுடன் இணைந்து இதில் செயல்படும். விருதுக்கு தகுதியான நபர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரைக் குழுவால் தீர்மானிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
வெற்றியாளர்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படுவார்கள்.