டாக்கா டெஸ்ட்: வங்கதேசம் 296-க்கு ஆல்அவுட்
By DIN | Published On : 14th February 2021 07:53 AM | Last Updated : 14th February 2021 07:53 AM | அ+அ அ- |

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 96.5 ஓவா்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 142.2 ஓவா்களில் 409 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கிருமா போனா் 90, ஜோசுவா சில்வா 92, அல்ஸாரி ஜோசப் 82 ரன்கள் எடுத்தனா். வங்கதேசம் தரப்பில் அபு ஜயீத், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 36 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுா் ரஹிம் 27, முகமது மிதுன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.
3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய அந்த அணியில் முஷ்பிகுா் ரஹிம் 54, லிட்டன் தாஸ் 71, மெஹிதி ஹசன் மிராஸ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனா். இறுதியில் வங்கதேச அணி 96.5 ஓவா்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ரஹீம் காா்ன்வால் 5 விக்கெட்டுகளையும், ஷெனான் காபிரியேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. கிருமா போனா் 8, ஜோமெல் வாரிகன் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனா். முன்னதாக கேப்டன் பிரத்வெயிட் 6, ஷேன் மோஸ்லே 7, ஜான் கேம்ப்பெல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனா்.
மேற்கிந்திய தீவுகள் அணி ஒட்டுமொத்தமாக 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.