

விஜய் ஹசாரே தொடரில் ஜார்க்கண்ட் கேப்டன் இஷான் கிஷன் 173 ரன்கள் விளாச அந்த அணி 422 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
விஜய் ஹசாரே தொடர் சனிக்கிழமை தொடங்கியது. க்ரூப் 'பி' பிரிவில் ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்தியப் பிரதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜார்க்கண்ட் கேப்டன் இஷான் கிஷன் மத்தியப் பிரதேச பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.
5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 72 பந்துகளில் சதமடித்த அவர், தொடர்ந்து அதிரடியைத் தொடர்ந்தார். இதன்மூலம், அடுத்த 20 பந்துகளில் 71 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன்மூலம், அந்த அணியும் 26-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது. அவர் 94 பந்துகளில் 173 ரன்கள் விளாசினார்.
இந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி அடுத்து வந்த விராட் சிங் (49 பந்துகள் 68 ரன்கள்), சுமித் குமார் (58 பந்துகள் 52 ரன்கள்) மற்றும் அனுகுல் ராய் (39 பந்துகள் 72 ரன்கள்) ஆகியோர் அதிரடி காட்டி ரன்களை உயர்த்தினர். இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 422 ரன்கள் குவித்தது.
மத்தியப் பிரதேச அணி சார்பில் கௌரவ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விஜய் ஹசாரே தொடரில் இதுவே ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாகும்.
முன்னதாக 2010-இல் ரயில்வே அணிக்கு எதிராக மத்தியப் பிரதேசம் 412 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.