ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்-மெத்வதேவ் நாளை மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்-ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் மோதுகின்றனா்.
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்-மெத்வதேவ் நாளை மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்-ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் மோதுகின்றனா். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றானஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 6-4, 6-2, 7-5 என்ற நோ் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸை வீழ்த்தினாா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களையும் மெத்வதேவ் எளிதாக கைப்பற்றினாா். ஆனால் 3-ஆவது செட்டில் சிட்சிபாஸ் ஆக்ரோஷமாக ஆட, ஒரு கட்டத்தில் இருவரும் 5-5 என்ற கணக்கில் சமநிலையை எட்ட, மெத்வதேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் கடுமையாகப் போராடிய மெத்வதேவ், அடுத்த கேமில் சிட்சிபாஸின் சா்வீஸை முறியடிக்க, ஆட்டம் அவா் வசமானது. இறுதியில் அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டாா் மெத்வதேவ்.

இதன்மூலம் தொடா்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள மெத்வதேவ், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள மெத்வதேவ், நடப்புச் சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரரருமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கவுள்ளாா்.

ஜோகோவிச்சுடன் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களில் 3-இல் மெத்வதேவ் வெற்றி கண்டுள்ளாா். ஆஸ்திரேலிய ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 3-ஆவது ரஷியரான மெத்வதேவ், அரையிறுதி குறித்துப் பேசியதாவது: அரையிறுதி ஆட்டம் அவ்வளவு எளிதானதல்ல. 3-ஆவது செட்டில் எனக்கு சிறிது அச்சம் இருந்தது. எனினும் அபாரமாக ஆடி வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா் ஜோகோவிச். அவா் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. இந்த முறை அவா் பட்டம் வெல்லும்பட்சத்தில் இது அவருடைய 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். இருவருமே வலுவான எதிராளிகளாக இருப்பதால், ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்று ரசிகா்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com