2-ம் உலகப் போருக்குப் பிறகு குறைந்த ஓவர்களில் முடிவடைந்த ஆமதாபாத் டெஸ்ட்!
By DIN | Published On : 26th February 2021 11:21 AM | Last Updated : 26th February 2021 11:21 AM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டம், 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோவ், கிராவ்லி ஆகியோரும் இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடினார்.
முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு வீழ்ந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 81 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 49 ரன்கள் வெற்றி இலக்கை 2-ஆம் நாளிலேயே எட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 11 விக்கெட்டுகள் எடுத்த அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா்.
மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், மார்ச் 4 அன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.
ஆமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் மொத்தமாக 842 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இரண்டு நாள்களுக்குள் முடிவடைந்தது. டெஸ்ட் வரலாற்றில் மிகக்குறுகிய காலத்தில் முடிவடைந்த டெஸ்டுகளின் பட்டியலில் ஆமதாபாத் டெஸ்டும் இடம்பிடித்துள்ளது. அதாவது 2-ம் உலகப் போருக்குப் பிறகு இந்தளவுக்குக் குறைந்த பந்துகளில் எந்த ஒரு டெஸ்டும் முடிந்ததில்லை. இந்த டெஸ்டில் 387 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ரன்கள் எடுக்கப்பட்ட டெஸ்டுகளில் இதற்கு 10-ம் இடம்.
குறைந்த பந்துகளில் முடிவடைந்த டெஸ்டுகள்
1932: ஆஸ்திரேலியா vs தெ.ஆ. - 656 பந்துகள்
1935: மே.இ. vs இங்கிலாந்து - 672 பந்துகள்
1888: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - 788 பந்துகள்
1888: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - 792 பந்துகள்
1889: தெ.ஆ. vs இங்கிலாந்து - 796 பந்துகள்
1912: இங்கிலாந்து vs தெ.ஆ. - 815 பந்துகள்
2021 - இந்தியா vs இங்கிலாந்து - 842 பந்துகள்
1950க்குப் பிறகு குறைந்த பந்துகளில் முடிவடைந்த டெஸ்ட்டுகள் (அனைத்தும் இரு நாள்களில் முடிந்தவை)
2000: இங்கிலாந்து vs மே.இ. தீவுகள்
2002: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா
2005: தெ.ஆ. vs ஜிம்பாப்வே
2005: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து
2017: தெ.ஆ. vs ஜிம்பாப்வே
2018: இந்தியா vs ஆப்கானிஸ்தான்
2021: இந்தியா vs இங்கிலாந்து

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...