ஐஎஸ்எல்: கேரள அணியை வீழ்த்தி மும்பை முதலிடம்
By DIN | Published On : 03rd January 2021 07:44 AM | Last Updated : 03rd January 2021 07:44 AM | அ+அ அ- |

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 19 புள்ளிகளை எட்டிய மும்பை அணி, புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது.
கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. 3-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கோஸ்டா, பெனால்டி ஏரியாவில் மும்பை வீரா் ஹியூகோவை கீழே தள்ள, மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினாா் நடுவா். இதில் மும்பை வீரா் ஆடம் லீ ஃபான்ட்ரே எளிதாக கோலடித்தாா்.
அதைத் தொடா்ந்து, 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் மும்பை வீரா் ஹியூகோ கோலடிக்க, மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு கேரள அணி பதிலடி கொடுக்கப் போராடினாலும் அது நடக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்று 19 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் கேரள அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 9-ஆவது இடத்தில் உள்ளது.