மூன்று வாய்ப்புகளைத் தவறவிட்ட இந்திய அணி: ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையில் 93/1

3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
லபுசான்
லபுசான்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது புகோவ்ஸ்கியும் லபுசானும் நிதானமாக விளையாடினார்கள். இன்றும் அற்புதமாகப் பந்துவீசினார் அஸ்வின். 22-வது ஓவரை அஸ்வின் வீசியபோது, புகோவ்ஸ்கி வழங்கிய எளிதான கேட்சை நழுவவிட்டார் ரிஷப் பந்த். இதனால் அஸ்வின் கோபமடைந்தார்.

அடுத்ததாக சிராஜ் வீசிய பவுன்சர் பந்திலும் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்தார் புகோவ்ஸ்கி. எனினும் கடினமான அந்த கேட்சையும் நழுவவிட்டார் ரிஷப் பந்த். மூன்றாம் நடுவர் கவனித்து அவுட் இல்லை என அறிவித்தார். 

இதுபோதாதென்று எளிதான ரன் அவுட் ஒன்றையும் பும்ரா நழுவ விட்டார். 29-வது ஓவரின்போது புகோவ்ஸ்கி அடித்த ஷாட்டை பவுண்டரி அருகே தடுத்த பும்ராவுக்குக் கால் இடறியது. அப்போது மூன்றாவது ரன்னுக்கு முயன்ற புகோவ்ஸ்கி, பாதி தூரத்தைத் தாண்டி ஓடி வந்துவிட்டார். ஆனால் லபுசான் அந்த மூன்றாவது ரன்னை மறுக்கவே மீண்டும் திரும்பி ஓடினார் புகோவ்ஸ்கி. பும்ரா வீசிய த்ரோ பலவீனமாக இருந்ததால் அது விக்கெட் கீப்பருக்கு வந்து சேர்வதற்குள் கிரீஸுக்குத் திரும்பிவிட்டார் புகோவ்ஸ்கி.

இதுபோன்ற மூன்று வாய்ப்புகளில் நூலிழையில் தனது விக்கெட்டைப் பறி கொடுக்க இருந்த புகோவ்ஸ்கி, தனது அறிமுக ஆட்டத்திலேயே 79 பந்துகளில் அரை சதத்தை எடுத்தார். 

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 31 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. புகோவ்ஸ்கி 54, லபுசான் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com