இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி லேங்கர் கூறியது:
"இது மிகவும் சிறந்த டெஸ்ட் தொடர். இறுதியில் எப்போதுமே வெற்றியாளர் அல்லது தோல்வியாளர் இருப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்தான் வெற்றியாளர். இது எங்களை மிகவும் பாதிக்கவுள்ளது.
முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியை 36 ரன்களுக்கு சுருட்டி 3 நாள்களிலேயே வெற்றி பெற்ற பிறகு, அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. அதிலிருந்து இப்படி போராடி வருவது அற்புதமானது. முழு பாராட்டுகளையும் பெறுவதற்கான தகுதி இந்திய அணிக்கு உள்ளது. அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், அதிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம்.
முதலாவது, எதையும் எளிதாக எண்ணிவிடக் கூடாது. இரண்டாவது, இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தியாவில் 150 கோடி மக்கள் உள்ளனர். அதில் சிறந்த 11 பேர் விளையாடுகிறார்கள் என்றால் அவர்கள் கடினமானவர்கள் அல்லவா?
பென் ஸ்டோக்ஸின் ஹெட்டிங்லே இன்னிங்ஸை ரிஷப் பந்த் நினைவுபடுத்தினார். அவர் எந்த அச்சமும் இல்லாமல் இருந்தார். அதற்காக அவரைப் பாராட்டியாக வேண்டும். இது நம்பமுடியாத இன்னிங்ஸ்.
இளம் ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் ஆட்டம் முழுவதும் எங்களுக்கு நெருக்கடியளித்து வந்தனர். நான் கூறியதுபோல் இந்திய அணிக்கு அனைத்து பாராட்டுகளையும் பெறுவதற்கான தகுதி உள்ளது.
எங்களுடைய பார்வையில் 4 பந்துவீச்சாளர்கள்தான் தொடர்ச்சியாக விளையாடினர். அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். துரதிருஷ்டவசமாக இன்று வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் கடுமையாகப் போராடியதை எண்ணி பெருமை அடைகிறேன்."