சென்னை டெஸ்டில் ஜானி பேர்ஸ்டோவ் விளையாடுவாரா?: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்
By DIN | Published On : 30th January 2021 05:35 PM | Last Updated : 30th January 2021 05:35 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் ஜானி பேர்ஸ்டோவ் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ், 2-வது டெஸ்டுக்குப் பிறகுதான் இந்தியாவுக்குத் திரும்புவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் டெஸ்டுக்குப் பிறகு பேர்ஸ்டோவ் இங்கிலாந்து அணியில் சேர்வார் என இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டில் விளையாடுவதற்காகத்தான் பேர்ஸ்டோவ் இந்தியாவுக்குத் திரும்புவார், 2-வது டெஸ்டில் விளையாட அல்ல. சாம் கரண், மார்க் வுட் ஆகியோருடன் பேர்ஸ்டோவ் இந்தியாவுக்குத் திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேர்ஸ்டோவ் விளையாடினார். அவருக்கு ஓய்வு அளிப்பதற்காக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்படவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...