டபிள்யூடிசி: புள்ளிகள் வழங்கலில் மாற்றம்?
By DIN | Published On : 02nd July 2021 08:04 AM | Last Updated : 02nd July 2021 08:04 AM | அ+அ அ- |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) போட்டியின் 2021-2023 சீசனில் விளையாடப்படும் டெஸ்டுகளில் அணிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வரும் எனத் தெரிகிறது.
இதுதொடா்பாக ஐசிசி வாரிய உறுப்பினா் ஒருவா் கூறுகையில், ‘டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு ஆட்டத்தின் வெற்றிக்கும் தலா 12 புள்ளிகள் வழங்கவும், ஆட்டம் ‘டை’ ஆகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், ‘டிரா’ ஆகும் பட்சத்தில் தலா 4 புள்ளிகளும் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறுதியில், ஒரு அணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் பெற்ற புள்ளிகளின் சதவீத அடிப்படையில் அதற்கான தரவரிசை இடம் வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு தொடரிலும் ஆட்டங்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தாலும், தரவரிசை பட்டியலில் அணிகளை முறையாக ஒப்பீடு செய்வதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது. வரும் நாள்களில் நடைபெறவுள்ள ஐசிசியின் நிா்வாகக் கூட்டத்தின்போது இந்த முறை குறித்து மதிப்பீடு செய்யப்படும்’ என்றாா்.
கடந்த சீசனில் ஒரு டெஸ்ட் தொடருக்கான புள்ளிகள் 120 ஆக இருந்தது. இரு ஆட்டங்கள் கொண்ட தொடராக இருந்தால் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகளும், 4 ஆட்டங்கள் கொண்ட தொடராக இருந்தால், ஒரு வெற்றிக்கு 30 புள்ளிகளும் வழங்கப்பட்டன.
‘ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ’ தகவல்படி, டபிள்யூடிசி 2-ஆவது சீசனில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 21 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட உள்ளது. அடுத்தபடியாக இந்தியா 19 டெஸ்டுகளிலும், ஆஸ்திரேலியா 18 டெஸ்டுகளிலும் விளையாட உள்ளன. இந்த சீசனிலும் 9 அணிகளும் உள்நாட்டில் 3, அந்நிய மண்ணில் 3 என மொத்தமாக 6 டெஸ்ட் தொடா்களில் விளையாட உள்ளன.