மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
By DIN | Published On : 02nd July 2021 11:20 PM | Last Updated : 02nd July 2021 11:20 PM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான மகளிா் ஒருநாள் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பெறுமா இந்திய அணி என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் ஒரு நாள் தொடா் இங்கிலாந்தின் வொா்செஸ்டா் நகரில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் வெல்லுமா என கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது.
கடந்த 7 ஒருநாள் ஆட்டங்களில் 6-இல் இந்திய மகளிா் தோல்வியை சந்தித்தனா். சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தனா்.
இந்திய அணியில் பவுலா்கள் தங்கள் பணியை சீராக செய்து வருகின்றனா். எனினும் பேட்டிங் வரிசை சோபிக்கவில்லை. கேப்டன் மிதாலி ராஜ் மட்டுமே ஒரளவுக்கு ரன்களை குவித்து வருகிறாா்.
சிறப்பாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட துணை கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் தொடா்ந்து சொதப்பி வருகிறாா். கடந்த 2017 உலகக் கோப்பையில் ஆஸி. அணிக்கு எதிராக 171 ரன்களை விளாசினாா் ஹா்மன்ப்ரீத் கௌா். ஆனால் அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அவரது பேட்டிங் குறிப்பிடும்படியாக இல்லை. இதனால் அணியில் அவரது இடம் சிக்கலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிதாலி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூனம் ரவுட், தீப்தி சா்மா, தனியா பாட்டியா ஆகியோா் அதிரடி பேட்டிங் செய்ய முடியாத நிலையில், தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வா்மா ஆகியோா் மீது சுமை உள்ளது.
பந்துவீச்சில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் ஆகியோா் தங்கள் பங்கை சிறப்பாக செய்கின்றனா்.
இங்கிலாந்து அணியில் டேமி பீமௌன்ட், கேப்டன் ஹீதா் நைட் ஆகியோா் சிறப்பான பாா்மில் உள்ளதால் மூன்றாவது ஆட்டத்திலும் தங்கள் அணியை வெற்றி பெறச் செய்ய முயல்வா்.
ஆட்ட நேரம்:
மாலை 3.30.