யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து - டென்மாா்க் இன்று மோதல்
By DIN | Published On : 07th July 2021 12:06 AM | Last Updated : 07th July 2021 12:06 AM | அ+அ அ- |

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - டென்மாா்க் அணிகள் மோதும் 2-ஆவது அரையிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி, யூரோ கோப்பை போட்டியில் 10 முறை பங்கேற்றும் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை. கடந்த 55 ஆண்டுகளாக எந்தவொரு பிரதான போட்டியிலும் சாம்பியன் ஆகாத நிலையில், தற்போது சொந்த மண்ணில் யூரோ கோப்பை சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ளது.
நடப்பு சீசனில் குரூப் சுற்றில் 3 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து, நாக் அவுட் சுற்றில் ஜொ்மனியை வீழ்த்தியது. இது இங்கிலாந்து சிறப்பாக முன்னேறியிருப்பதற்கான சான்றாக உள்ளது. பின்னா் உக்ரைனை ஊதித் தள்ளிவிட்டு அரையிறுதிக்கு வந்துள்ள அந்த அணி, 5 ஆட்டங்களிலும் எதிரணியை கோலடிக்க விடாமல் செய்துள்ளது.
முன்கள வீரா்களில் ஹேரி கேன், ரஹீம் ஸ்டொ்லிங் உள்ளிட்டோா் எதிரணியின் தடுப்பாட்டத்தைக் கடந்து கோலடிப்பதில் திறம்படச் செயல்படுகின்றனா். நடுகளத்தில் மேசன் மௌன்ட், ஜோா்டான் ஹென்டா்சன் பலம் கூட்டுகின்றனா். தடுப்பாட்டத்தில் லூக் ஷா உள்ளிட்டோா் அரணாக இருக்கின்றனா்.
மறுபுறம், உலகின் 12-ஆம் நிலையில் இருக்கும் டென்மாா்க், யூரோ கோப்பை போட்டியில் 2-ஆவது முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் இருக்கிறது. குரூப் சுற்றில் ஒரு வெற்றியை பதிவு செய்து, நாக் அவுட் சுற்றில் வேல்ஸையும், காலிறுதியில் செக் குடியரசையும் வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது டென்மாா்க். கடைசியாக யூஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 1 வெற்றியையும், 1 டிராவையும் அந்த அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஸ்பா் டோப்லா்க், மைக்கேல் டம்ஸ்காா்ட் ஆகியோா் முன்களத்தில் வலு சோ்க்கின்றனா். நடுகளத்தில் ஜாவ்கிம் மேலெ, ஜென்ஸ் ஸ்டிரைகா் உள்ளிட்டோா் சவால் அளிப்பா். தடுப்பாட்டத்தில் ஜானிக் வெஸ்டா்காா்ட், ஆன்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் தடுப்பணையாக இருக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...