டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்திலிருந்து 5 தடகள போட்டியாளர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்திலிருந்து 5 தடகள போட்டியாளர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
 ஆடவர் 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியும், கலப்பு 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 ஆரோக்கிய ராஜீவ் (30): திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றாக வேண்டும் என்ற உறுதியில் மிகுந்த உத்வேகத்துடன் பயிற்சி பெறுகிறேன். ஒலிம்பிக் போட்டிக்கான ஆண்கள் தொடர் ஓட்டத்துக்கு சிறந்த அணி அமைந்துள்ளது. எனவே, இம்முறை பதக்கம் வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஒலிம்பிக்கில் பெறும் வெற்றி மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்' என்றார்.
 நாகநாதன் பாண்டி (25): ராமநாதபுரம் மாவட்டம், சிங்கப்புலியாபட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி, சென்னை தனி ஆயுதப்படை காவலராக உள்ளார். இவர் பஞ்சாபில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
 அகில இந்திய அளவிலான போட்டிகளில் காவல்துறை சார்பில் தங்கம் வென்றுள்ளார். அவர், "ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், எனது கிராமத்துக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதே எனது லட்சியம்' என்றார்.
 தனலட்சுமி சேகர் (22): திருச்சி மாவட்டம் கூடுரைச் சேர்ந்த தனலட்சுமி சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாகத் தடகளத்தில் தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு, பயிற்சி செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை இருந்தது.
 அவர் கூறுகையில், "என்னை ஒலிம்பிக் வீராங்கனையாக்குவதில் எனது தாய் உறுதியாக இருந்தார். மணிகண்டன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மற்றும் பலரது உதவியால் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியுள்ளேன். நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நிச்சயம் பதக்கத்தை வெல்வேன் என நம்புகிறேன்' என்றார்.
 சுபா வெங்கடேஷ் (21): திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்த சுபா கூறுகையில், "காவல்துறையில் பணியாற்றிய எனது தாத்தா சங்கிலிமுத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஊக்கத்தை எனக்குள் விதைத்தார்.
 சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் பங்கேற்று, அதில் 3 போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ள நிலையில் எனக்கு இதுவரை அரசுப் பணி கிடைக்கவில்லை.
 தகுதிக்கேற்ப அரசு வேலை இருந்தால், அதைப் பயன்படுத்தி மேன்மேலும் இத்துறையில் சிறந்து விளங்க முடியும். இந்த ஒலிம்பிக் போட்டியில் எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்' என்றார்.
 ரேவதி வீரமணி (23): மதுரை மாவட்டம், சக்கிமங்கலத்தில் பிறந்த ரேவதி, கூடல்நகர் ரயில்வே சரக்கு நிலையத்தில் வணிக மற்றும் பயணச்சீட்டு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் தாய், தந்தையை இழந்தவரை பாட்டி வளர்க்க, பள்ளி காலத்திலேயே தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்றார். பயிற்சியாளர் கண்ணன் வழிகாட்டுதலில் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றார்.
 மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து முடித்தவருக்கு, கடந்த ஆண்டு ரயில்வே பணி கிடைத்தது. அவர் கூறுகையில், "பஞ்சாபில் நடத்த தகுதித் தேர்வில் 400 மீட்டரை 53.55 நிமிடங்களில் நிறைவு செய்து ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்' என்றார்.
 தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 5 போட்டியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
 அவர்களில் ஆரோக்கிய ராஜீவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்நிலை விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழும், சுபா வெங்கடேசன், சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழும் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 போட்டியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com