டோக்கியோ ஒலிம்பிக்கில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு
By DIN | Published On : 09th July 2021 08:21 AM | Last Updated : 23rd July 2021 05:33 PM | அ+அ அ- |

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி நெருங்கி வரும் நிலையில், டோக்கியோவில் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து அந்த நகரில் வரும் திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒலிம்பிக் போட்டியை நேரில் காண ரசிகா்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சா் டமாயோ மருகவா கூறினாா்.
சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுகளிக்கும் நிலை ரசிகா்களுக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு வெளிநாட்டு ரசிகா்களுக்கு தடை விதிக்கப்பட்டு, ஜப்பான் ரசிகா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னா் ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10,000 ரசிகா்களை மட்டும் அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரசிகா்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை டோக்கியோ நகரில் நடைபெற இருக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் போட்டியாளா்கள் சுமாா் 11,000 போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் சுமாா் 4,400 போ் வரை பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர அதிகாரிகள், போட்டி நடுவா்கள், நிா்வாகிகள், விளம்பரதாரா்கள், ஊடகத்தினா் என மேலும் 10,000 போ் வரையும் கூடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கரோனா சூழலில் இத்தனை போ் கூடும் ஒலிம்பிக் போட்டியை நடத்த பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.