அணி நிர்வாகத்துக்கு என் மீது நம்பிக்கை உள்ளது: சஹால்
By DIN | Published On : 09th July 2021 03:25 PM | Last Updated : 09th July 2021 03:25 PM | அ+அ அ- |

இந்திய அணி நிர்வாகத்துக்கு என் மீது நம்பிக்கை உள்ளது என பிரபல சுழற்பந்து வீச்சாளர் சஹால் கூறியுள்ளார்.
இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் கிரிக்ஃஇன்போ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் சஹால் கூறியதாவது:
என்னுடைய ஆட்டத்திறமையில் குறை எதுவும் இல்லை. எல்லா ஆட்டங்களிலும் நன்றாக விளையாட முடியாது. இந்தத் தொடர் எனக்கு முக்கியமானது. பந்துவீச்சுப் பயிற்சியாளருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறேன். அணி நிர்வாகத்துக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இங்கு (இலங்கை) உள்ளேன். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் யாரும் இங்கு இருக்க முடியாது. இந்தத் தொடரில் மிகவும் நம்பிக்கையான சஹாலை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்றார்.