மேற்கிந்தியத் தீவுகள் அதிரடியில் மீண்டும் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
By DIN | Published On : 11th July 2021 02:18 PM | Last Updated : 11th July 2021 02:18 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.
ஆண்ட்ரே பிளெட்சர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சற்று தாக்குப்பிடித்து அதிரடி காட்டிய லெண்டில் சிம்மன்ஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயில் 16 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், அந்த அணி 59 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, ஷிம்ரோன் ஹெத்மயருடன் அனுபவ டுவைன் பிராவோ இணைந்தார். இந்த இணை மேற்கிந்தியத் தீவுகளை சரிவிலிருந்து மீட்டது.
ஹெத்மயர் படிப்படியாக அதிரடிக்கு மாற பிராவோ ஒத்துழைப்பு தந்து விளையாடினார். 16 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
மிட்செல் ஸ்டார்க் வீசிய 17-வது சிக்ஸர் அடித்த ஹெத்மயர் 29-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அதே ஓவரில் பிராவோவும் சிக்ஸர் அடிக்க அதிரடிக்கு மாறியது மேற்கிந்தியத் தீவுகள்.
இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 62 பந்துகளில் 100 ரன்களை எட்டியது.
இதை எட்டிய அதே ஓவரில் ஹெத்மயர் 61 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் வந்த வேகத்தில் மிரட்டலைத் தொடங்கினார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிராவோ 34 பந்துகளில் 47 ரன்களும், ரஸ்ஸல் 8 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா முதல் ஓவரிலேயே மேத்யூ வேட் விக்கெட்டை இழந்தது. கேப்டன் பின்ச் 6 ரன்களுக்கு 4-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து, மிட்செல் மார்ஷ் பாட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தார். ஜோஷ் பிலிபி ஒத்துழைப்பு தராமல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்ஷும் அரைசதம் அடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு பறிபோனது. இதன்பிறகு ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
19.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம், 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...